எடுத்ததற்கெல்லாம் தமிழ்தேசிய கூட்டமைப்பு மீது விரல் நீட்டும் உள்ளங்கள் தமிழ் தேசிய அரசியல் எப்போதாவது ஒற்றுமையாக பயணித்ததா என்பதை ஆராயவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.
சமகாலத்தில் முஸ்லிம் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் ஒற்றுமையாக பதவி விலகினார்கள். இதேபோன்று தமிழ்தேசிய கூட்டமைப்பும், தமிழ் கட்சிகளும் எதிர்வரும் காலத்தில் ஒற்றுமையுடன் செயற்படுமா என அவரிடம் வியாழக்கிழமை (06) தொடர்பு கொண்டு கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்…
இஸ்லாமிய பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்திய மிலேச்சத்தனமான தற்கொலை குண்டு தாக்குதலை அடுத்து இலங்கை அரசியலில் அன்றாடம் பலதரப்பட்ட வாதப் பிரதிவாதங்களும், சந்தேகங்களும் இடம்பெற்றுவருகிறன.
இந்நிலையில் இலங்கை அரசில் அங்கம் வகித்த சகல முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் எல்லோரும் கூண்டோடு பதவி விலகியது தொடர்பாக பலரும் முஸ்லிம் அரசியல் தலைவர்களின் ஒற்றுமையை பாராட்டியுள்ளனர்.
சிலர் தமிழ் அரசியல் தலைவர்கள் முஸ்லிம் அரசியல் தலைவர்களை போல் ஒற்றுமையாக செயல்பட முஸ்லிம் அரசியல் தலைவர்களிடம் இருந்து ஒற்றுமையை கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் இப்படியான ஒரு முடிவை தமிழ்தேசிய கூட்டமைப்பு ஏனைய தமிழ் கட்சிகள் இணைந்து எடுக்க முடியாதா என ஆதங்கங்களையும் குற்றச்சாட்டுக்களையும் முன்வைப்பதை காணமுடிகிறது.
முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இப்போது அவர்களின் பாராளுமன்ற பதவியை விட்டு விலகவில்லை அமைச்சர் பதவிகளை மட்டுமே இல்லாமல் செய்துள்ளனர்.
ஆனால் தமிழ் அரசியல் தலைவர்கள் குறிப்பாக தமிழர் விடுதலைக்கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் 13 பேரும் அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த அ.அமிர்தலிங்கம் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை 6வது திருத்தசட்டத்திற்கு எதிராக சத்தியப்பிரமாணம் எடுக்க மாட்டோம் என பதவி விலகிய வரலாறு தமிழ் அரசியல் தலைவர்களுக்கு உண்டு.
தமிழ் தேசிய அரசியலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய சகல முஸ்லிம் அரசியல் தலைவர்களும் இலங்கை தமிழரசு கட்சி மூலம் வெற்றிபெற்ற முஸ்லிம் அரசியல் வாதிகள் அத்தனை பேரும் இலங்கை அரசின் பக்கமும் அதன்பின் பேரினவாத கட்சிகளிலுமே ஒற்றுமையாக அமைச்சர் பதவிகளை பெற்று சலுகை அரசியலுக்காக சோரம் போனவரலாறுகளும் உண்டு.
தமிழ்தேசிய அரசியல் என்பது வடக்கு கிழக்கு இணைந்த மாநிலத்தில் சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வை பெறும் கொள்கையுடன் கூடிய அரசியலாகும்.
இந்த அரசியல் செயல்பாடுகள் 1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு தந்தைசெல்வாவால் முன்னெடுக்கப்பட்ட அகிம்சை ரீதியான போராட்ட அரசியல், அதன்பின் 1976 தொடக்கம் தலைவர் பிரபாகரனால் முன்னெடுத்த ஆயுதரீதியான போராட்ட அரசியல், தற்போது 2009ஆம் ஆண்டு தொடக்கம் சம்மந்தன் ஐயா தலைமையில் இடம்பெறும் இராஜதந்திர அரசியல் எல்லாமே தமிழ் கட்சிகள், தமிழ் விடுதலை இயக்கங்கள் ஒற்றுமையாக செயல்பட்ட வரலாறு இல்லை. நோக்கம் ஒன்றாக இருந்தாலும் செயல்பாடுகள் வித்தியாசமாகவே முன்னெடுக்கப்பட்டதை நாம் பார்க்க வேண்டும். ஏன் தற்போதுகூட விடுதலைப்புலிகளின் மௌனத்திற்குப்பின் புலம் பெயர் உறவுகள் புலம்பெயர் நாடுகளில் இருபதுக்கு மேற்பட்ட அமைப்புக்கள் ஈழவிடுதலை அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்கின்றனர். அவர்களும் ஒரு குடையில் ஒற்றுமையாக இயங்க முடியவில்லை ஆனால் நோக்கம் அவர்களிடம் ஒன்றாக இருந்தாலும் செயல்பாடுகள் ஒன்றாக இல்லை அதனால் அவர்களும் ஒற்றுமையாக செயல்பட முடியவில்லை.
தமிழர்கள் ஒற்றுமை என்பது அரசியல் ரீதியாக ஈழத்திலும் இலங்கையிலும் ஏன் புலம்பெயர் தேசங்களிலும் ஈழத்தமிழர்கள் மத்தியில் ஈழவிடுதலை அகிம்சை போராட்டகாலமானாலும் சரி ஆயுத விடுதலை போராட்ட காலமானாலும் சரி தற்போதய இராஜதந்திர செயல்பாட்டிலும்சரி இருந்ததில்லை
தமிழ் மன்னர் காலம், சங்ககாலம், இராமாயணம், பாரதம் எதை எடுத்தாலும் வரலாறுகள் அனைத்திலும் தமிழர்கள் ஒற்றுமையாக எந்த நிலையிலும் இருந்ததாக சரித்திரம் இல்லை, ஏன் தமிழ் கடவுள்களிலும் ஒற்றுமை இருந்ததில்லை..!
“சிவனும் பார்வதியும்" பிள்ளையாரையும் முருகனையும் அழைத்து உலகத்தை சுற்றிவருபவர்களுக்கே மாம்பழம் தருவதாக கூறியபோது பிள்ளையார் தாயும் தந்தையும் உலகம் என சிவனையும் பார்வதியையும் சுற்றி வந்ததும்,
முருகப்பெருமான் மயிலின்மீது ஏறி உலகம் சுற்றிய கதையும் எதனைக் காட்டுகிறது. பிள்ளையாருக்கும் முருகனுக்கும் ஒத்த கருத்து இருக்கவில்லை. ஒற்றுமை இருக்கவில்லை என்பது தெளிவாகும். தமிழர் ஒற்றைமையாக தற்போதய இஸ்லாமிய அமைச்சர்கள் இலங்கையில் எடுத்த அரசியல் முடிவை வைத்து அவர்களை பார்த்து தமிழர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என கருத்துக்களை கூறுபவர்கள் கடந்த கால வரலாறுகளை மீட்டுப்பார்பது அவசியம்.
இஸ்லாமிய அரசியல் தலைவர்களின் கொள்கை கோட்பாடு எல்லாமே அபிவிருத்தி சலுகை பதவி இதனால் எந்த அரசு ஆட்சியமைத்தாலும் அமைச்சர் பதவி பெறுவதில்தான் அவர்களின் இலக்கு இருப்பதும் அதில் ஒற்றுமை இருப்பதும் கண்கூடு. ஈழத்தமிழர் அரசியல் என்பது வடக்கு கிழக்கு தாயகத்தில் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு இதனை அடைவதற்கான அரசியல் செயல்பாடுகளை பல்வேறு இயக்கங்கள் கட்சிகள் புலம்பெயர் அமைப்புக்கள் பல பெயர்களில் இயங்குவதை காணலாம்.
பல அமைப்புக்கள் இயங்கினாலும் நோக்கம் ஒன்றாக இருக்கிறது செயல்பாடுகள் வித்தியாசமாக அமைகிறது, செயல்பாடுகள் வித்தியாசமாக உள்ளவரை தமிழர் ஒற்றுமையாக செயல்படுவது மிக கடினம். எடுத்ததற்கெல்லாம் தமிழ்தேசிய கூட்டமைப்பு மீது விரல் நீட்டும் உள்ளங்கள் தமிழ் தேசிய அரசியல் எப்போதாவது ஒற்றுமையாக பயணித்ததா என்பதை ஆராய வேண்டும்.
அதுபோலவேதான் ஈழத்திலும் உள்ள தமிழ்தேசிய கட்சிகளையும் ஒற்றுமை படுத்தி ஒருகுடையில் யாராவது கொண்டுவர முடியுமா? எமது அரசியல் நோக்கம் அமைச்சு பதவி, சலுகை, மட்டும் என்றால் இஸ்லாமிய அரசியல் தலைவர்களை போல் நாமும் ஒற்றுமையாக முடிவெடுக்கலாம் அல்வா?
தமிழர்கள் ஒற்றுமை பற்றி கருத்துக்களை கூறும்போது ஒவ்வொருவரும் தமது நெஞ்சில் கைவைத்து நாம் ஒற்றுமையாக குடும்பத்தில் ஊரில் பிரதேசத்தில் மாவட்டத்தில் மாகாணத்தில் தாயகத்தில் தேசியத்தில் இருக்கின்றோமா என்பதை சிந்தித்து மற்றவர்களுக்கு விரல் நீட்டுங்கள். அரசியலுக்கு அப்பால் உறவுகளில் ஒற்றுமை உள்ளதா?
உணர்வுகளில் ஒற்றுமை உள்ளதா? , கொள்கைகளில் ஒற்றுமை உள்ளதா?
சிந்தியுங்கள்!, யாரும் பதவி விலகியதை வைத்து, யாரும் சலுகை பெறுவதை வைத்து, யாரும் சோரம் போவதை வைத்து உங்களை மாற்றிக்கொள்ள வேண்டாம். நாம் நாமாக வாழுவோம் எனவும் மேலும் கூறினார்.
0 Comments:
Post a Comment