பிரஜைகள் ஒவ்வொருவரும் தமக்குள்ள உரிமைகள் தொடர்பில் அறிந்திருக்க வேண்டும் - சட்ட உதவி நிலையத்தின் வளவாளர் சந்திரகுமார்.
குடிமக்கள் ஒவ்வொருவரும் தமக்கான உரிமைகள் என்ன எனபது பற்றி அறிந்து வைத்திருத்தல் அவசியம் என்பதோடு சட்டம் பற்றி தனக்கு தெரியாதென எவரும் கூறிவிட முடியாது என சட்ட உதவி நிலையத்தின் வளவாளர் சந்திரலிங்கம் சந்திரகுமார் தெரிவித்தார்.
திங்கட்கிழமை 24.06.2019 தகவல் அறியும் உரிமை மற்றும் அமுல்படுத்தல் தொடர்பில் மட்டக்களப்பில் பொது மக்களைத் தெளிவூட்டும் கருத்தரங்கு தன்னாமுனை மியானி கேட்போர் கூடத்தில் அகம் நிறுவனத்தின் அனுசரணையுடன் இடம்பெற்றது.
மட்டக்களப்பு அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தின் இணைப்பாக்கத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், உள்ளுராட்சி மன்றப் பிரதிநிதிகள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் பங்குபற்றுநர்களாகக் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தொடர்ந்து கருத்துரைத்த வளவாளர் சந்திரகுமார்,
மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் என்பவற்றுடன் சேர்த்து தற்போது தகவல் அறியும் உரிமைச் சட்டமும் அமுலுக்கு வந்துள்ளது.
இது பொதுமக்களுக்கு அதிக நன்மைகள் பயக்கும் சட்டமாகும் என்பதோடு இச்சட்டத்தை உயிரூட்டுபவர்கள் பொது மக்களாகவே உள்ளார்கள் என்பதும் ஒரு வரப்பிரசாதமாகும்.
தீர்மானங்கள் மேற்கொள்வதில் பொதுமக்களின் பங்கும் பணியும் மிக மிக அவசியமானது. ஆனால், நமது பாரம்பரிய முறைகளின்படி மேலிடத்திலிருந்தே அடிமட்ட மக்களுக்காகத் தீர்மானம் எடுக்கப்பட்டு வந்துள்ளது. அதனால் கடந்த காலங்களில் அதிக பாதிப்பைச் சந்தித்தவர்கள் அடிமட்ட மக்களேயாகும்.
அரச, பொது அதிகார சபைகளது தீர்மானங்களின்போது பிரஜைகள் பாதிப்பிற்குள்ளாவதால், அத்தீர்மானம் மேற்கொள்ளும் செயற்பாட்டில் பிரஜைகளும் பங்கேற்றல் முக்கியம் பெறுகின்றது.
புதிய தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம் தீர்மானம் மேற்கொள்ளும் செயற்பாட்டில் பிரஜைகளும் பங்கேற்றல் கட்டாயம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமை என்பது 19வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட, மக்களது இறைமை அதிகாரத்தை பயன்படுத்தக்கூடிய 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க அடிப்படை உரிமை ஒன்றாகும்.
அதற்கமைய குறிப்பிட்ட நிறுவனத்தின் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்தும் நோக்கில் “தகவல்களைக் கோருவதற்காக” பொது மக்களை வலுவூட்டுதல் முக்கியமானதென்பதுடன், இது சனநாயகத்தின் கட்டாய அங்கமொன்றுமாகும்.
அதற்காகவே மக்கள் தமக்குள்ள உரிமைகள் தொடர்பில் தெளிவூட்டப்பட வேண்டிய தேவைப்பாடு உள்ளது.
இச்சட்டத்தை பொதுமக்கள் நன்கு பயன்படுத்தி தமக்கான உரிமைகளை வலுப்படுத்திக் கொள்வதோடு தமக்கான தங்குதிறனுள்ள அபிவிருத்திகளையும் சிறப்பாகச் செய்து கொள்ள முடியும்” என்றார்.
இந்நிகழ்வில் அரச சார்பற்ற ஒன்றியத்தின் தலைவர் கதிர் பாரதிதாசன், செயலாளர் எஸ்.பி. பிரசன்யா உட்பட இன்னும் பல ஆர்வலர்களும் வளவாளர்களும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment