தண்ணீரை பணம் கொடுத்து வாங்குவது போன்று சுத்தமான காற்றினையும் பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலை எதிர்காலத்தில் உருவாகும்.
இந்த நாட்டில் அனைவரும் சுற்றாடலை நேசிக்கின்றவர்களாக இருக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இல்லாதவிடத்து தண்ணீரை பணம் கொடுத்து வாங்குவது போன்று சுத்தமான காற்றினையும் பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலை எதிர்காலத்தில் உருவாகும் என போரதீவுப் பற்று பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன் தெரிவித்தார்.
உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பிரதேச செயலாகத்தின் ஏற்பாட்டில் பழுகாம் கண்டுமணி மகாவித்தியாலயத்தில் அதிபர் ஆ.புட்கரன் தலைமையில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற விசேட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலையே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றகையில்….
இந்த சுற்றாடல் தினம் என்பது அனைத்து நாடுகளும் சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக இந்த தினமானது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தினை ஆக்க பூர்வமாகவும் ஆழமாககவும் நாங்கள் பார்க்கவேண்டும் நாங்கள் என்ன விடயம் செய்கின்றோமோ அந்த விடயந்தான் எங்களை வந்தடைகின்றது. நாங்கள் சுற்றாடலை மாசு படுத்தினால் அது வேறுவடிவில் எமக்கு பாதிப்பினை ஆபத்தினை தருகின்ற விடயமாக அது எங்களை வந்தடைகின்றது.
உலகளாவிய ரீதியில் பார்க்கின்ற பொழுது வளி மாசடைதல் என்பது மிகவும் கூடுதலான விடயமாக இடம்பெற்று வருகின்றது. இவ்வாறான நிலைக்கு தற்போது எமது நாடு இன்னும் தள்ளப்படவில்லையாயினும், இன்று சீனா போன்ற பல நாடுகளில் சுத்தமான சுவாசத்திற்கான காற்றினை பையில் அடைத்து பணத்திற்க விற்பனை செய்கின்ற நிலைக்கு தற்போது அந்த நாடு தள்ளப்பட்டுள்ளது. நாங்கள் தண்ணீரை பணம் கொடுத்து வாங்கி குடிப்பது போன்றதொரு விடயமே இதுவாகும். எனவே நாங்கள் எதிர்காலத்தில் இந்த சுற்றாடல் பாதுகாப்பு விடயத்தில் விழிப்புணர்வுடன் செயற்படாவிட்டால் இவ்வாறதொரு நிலமை எமது நாட்டுக்கு உருவாகி நாங்களும் காற்றினை காசுகொடுத்து வாங்கி சுவாசிக்கின்ற ஒரு நிலை ஏற்படலாம்.
மற்றும் அண்மையில் கடலில் வாழ்கின்ற மீன்களினை வைத்து நடத்திய ஆய்வின்படி பிளஸ்ரிக் துகள்களை கடலில் வாழ்கின்ற மீன்கள் உண்டிருக்கின்றன என்ற உண்மை கண்டறியப்பட்டிருக்கின்றது. ஏராளமான குப்பைகள் பிளாஸ்ரிக் பொருட்கள் கடலில் கொட்டப்படுகின்ற போதுதான் இவ்வாறான சம்பங்கள் நிகழ்கின்றது. இவ்வாறான மீன்களை நாங்கள் உண்பதன் மூலம் எமக்கும் பலதரப்பட்ட பாதிப்புகள் உருவாகுவதற்கு சந்தர்ப்பம் உள்ளது. இவ்வாறாக அன்றாடம் நாங்கள் பாவிக்கின்ற பிளஸ்ரிக் பொருட்களை வெளியில் வீசுவதன் ஊடாக எமக்கு தீங்குகள் வருவதற்கு சந்தர்ப்பம் உள்ளது. அது நோயாக இருக்கலாம் அல்லது சூழல் சமநிலையை குழப்புகின்ற விடயமாகவும் இருக்கலாம் எனவே இந்த விடயத்திலும் நாங்கள் அவதானமாக இருக்கவேண்டும்.
இதேபோன்றுதான் நாங்கள் காடுகளை அழித்து வருகின்றோம் இதனால் புவி மிகவும் வெப்படைந்து வருவதனையும் நீங்கள் அறிவீர்கள். இந்த வெப்பமாதனினால் உலகளாவிய ரீதியில் பல்வேறு பாதிப்புக்கள் உருவாகிவருகின்றது. ஒரு நாட்டிலே எற்படுகின்ற சூழல் மாற்றத்திற்கு எதிரான தன்மை இன்னொரு நாட்டில் பாதிப்பை உண்டுபண்ணுவதாகவும் உள்ளது. எனவே இவ்வாறான விடயங்களை கருத்திற் கொண்டு நாங்கள் அனைவரும் சுற்றாடலை நேசிக்கின்றவர்களாக சுற்றாடல் சிந்தனையுள்ளவர்களாக இருக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இவ்வாறு இருந்தால் மாத்திரம்தான் நாங்கள் எமது எதிர்கால சந்ததியினருக்கு ஒரு சிறந்த சுற்றாடலினை கையளிக்க முடியும் இதற்காக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் ஊடாகத்தான் நாங்கள் இதனை சாதிக்க முடியம் என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment