1 Jun 2019

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் மற்றைய மதங்களை அழித்து தனது மதத்தை நிலை நாட்டுவதையே நோக்கமாகக் கொண்டவர்கள்

SHARE
ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் மற்றைய மதங்களை அழித்து தனது மதத்தை நிலை நாட்டுவதையே நோக்கமாகக் கொண்டவர்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் வாழைச்சேனை மயிலங்கரச்சை வாழ் மக்களும் இணைந்து தற்கொலை குண்டு தாக்குதலால் உயிர்நீத்த உறவுகளுக்கு 41 ஆம் நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வாழைச்சேனை மயிலங்கரச்சை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை (31) நடைபெற்ற போதே அவர் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்…. 

இலங்கையிலே இடம்பெற்ற மிகப் பெரிய மிலேச்சத்தனமான தாக்குதலாக இஸ்லாமியப் பயங்கரவாதிகளின் ஏப்ரல் 21 தாக்குதலைக் கருதலாம். இத்தாக்குதலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 29 பேர் காவு கொள்ளப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் இஸ்லாமிய இராஜ்சியத்தை உருவாக்கும் நோக்கம் கொண்ட பயங்கரவாதிகளின் கிளையாக இருப்பவர்களினால் இத்தாக்குதல் இலங்கையில் முதன்முதலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்தாக்குதலை மேற்கொண்டவர்கள் தீவிரவாதிகளும் அல்ல, கிளர்ச்சியாளர்களும் அல்ல இவர்களுக்கு பயங்கரவாதிகள் என்ற பதம் மாத்திரமே பொருந்தும். இந்தப் பயங்கரவாதிகள் மற்றைய மதங்களை அழித்து தனது மதத்தை நிலை நாட்டுவதையே நோக்கமாகக் கொண்டவர்கள்.

எமது இலங்கையில் இது முதலாவது தாக்குதலாக இருப்பினும் இத்தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே தகவல்கள் கிடைத்து அரசாங்கத்திற்கு அறிவித்ததாக புலனாய்வு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் புலனாய்வு அதிகாரிகள், பிரதமர், ஜனாதிபதி உட்பட சகலரும் அறிந்திருந்த போதும் இதனைக் கண்டும் காணாமல் இருந்தும், இதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்ததன் காரணமாக நாங்கள் எமது மதிப்பிற்குரிய உயிர்களை இழந்திருக்கின்றோம். இதற்கு முழுப் பொறுப்பையும் ஜனாதிபதி உட்பட அரசாங்கமே ஏற்க வேண்டும் என்று தெரிவித்தார்.




SHARE

Author: verified_user

0 Comments: