3 May 2019

இந்து ஆலயங்கள் குறிவைக்கப்படாது என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை.

SHARE
பயங்கரவாதிகளின் அடுத்த இலக்காக பௌத்த விகாரைகள் இருக்கக்கூடும் என்ற கோணத்தில் நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீண்டும் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் வாராந்த பிரார்த்தனைகளை இரத்து செய்யுமாறு கோரியுள்ளார். இதில் இந்து ஆலயங்கள் குறிவைக்கப்படாது என்பதற்கான எந்த உத்தரவாதமும் இதுவரை வழக்கப்பட்டிருக்காத சூழ்நிலையில் இந்து ஆலயங்களின் பாதுகாப்பிலும் அதிக அக்கரை காட்டுமாறு மக்கள் கோரிவருகின்றனர். 
என இந்து சம்மேளனம் வெள்ளிக்கிழமை (03) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள பெரும்பாலான விகாரைகள், தேவாலயங்களில் சீ.சீ.டி.வி கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சி.சி.டி.வி. கெமராக்கள் பொருத்தப்பட்டிராத பல தேவாலயங்கள், பௌத்த விகாரைகள் மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் தற்போது சீ.சி.டி.வி.கமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக தேவாலயங்கள், விகாரைகள் மிகச்சிறிதாக இருந்தாலும் அவற்றின் பாதுகாப்பு சுற்றுமதில் அல்லது வேலி, மற்றும் நுழைவாயிற் கதவுகள் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டே கட்டமைக்கப்பட்டுள்ளன.

இவைகளுக்கப்பால் சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த  கட்டமைப்புக்களாக இருக்கும் பட்சத்தில் தனியார் பாதுகாவலர்களும் பணிக்கமர்த்தப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றது. எனினும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்து ஆலயங்களாயினும்சரி, சிறிய ஆலயங்களாயினும் சரி மேற்கூறப்பட்ட அம்சங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு பாதுகாப்பற்ற நிலையே காணப்படுகின்றது. கோயில்களின் உட்புற உட்கட்டமைப்புக்களுக்காக பாரிய நிதி செலவழிக்கப்படுகின்ற அதே நேரம் கோயில்களின் பாதுகாப்பில் சில கோயில் நிர்வாக சபையினர் தவிர பெரும்பாலான கோயில் நிர்வாக சபையினர் போதிய அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. இதனாலேயே கடந்த காலங்களில் கோயில்களில் உள்ள விக்கிரகங்கள் உடைக்கப்பட்டு இனங்களுக்கிடையே முறுகல் நிலை உருவானது.

மேற்கூறப்பட்ட விடயங்களைக் கருத்திற்கொண்டு போதிய நிதிக்கட்டமைப்பைக் கொண்டுள்ள கோயில் நிர்வாகங்கள் தத்தமது கோயில்களில் பாதுகாப்பு பொறிமுறையை ஏற்படுத்த இந்து சம்மேளனம் அதன் வலையமைப்பில் உள்ள கோயில்களுக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இவ்வாலோசனைகளை  ஊடகங்கள் வாயிலாகவும் ஏனைய ஆலயங்களுக்கும் விடுப்பதோடு இது தொடர்பாக  மேலதிக ஆலோசனைகள்பெற விரும்புவோர் hindfos@gmail.com    என்ற முகவரியில் தொடர்புகொள்ளுமாறு கோரப்படுகின்றது.

இவற்றிற்கு அப்பால் அந்தந்த  கிராமங்களில், நகரங்களில் உள்ள கோயில் நிர்வாக சபை உறுப்பினர்கள பாதுகாப்பு தரப்பினர் நடாத்தும் சந்திப்புக்களில், ஆலோசனை கூட்டங்களில்  தவறாமல் பங்குபற்றி தத்தமது பகுதிகளில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுசெய்யுமாறும் இந்து சம்மேளனத்தின் சார்பில் கோரிக்கை  விடுக்கப்பட்டு வருகின்றது. என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: