3 May 2019

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு பிரதமர் திடீர் விஜயம். ஊடகவியலாளர்களுக்கு உட்செல்லத் தடை.

SHARE
கடந்த ஈஸ்டர் ஞாயிறன்று (21.04.2019) தீவிரவாதிகளால் நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெள்ளிக்கிழமை (3) திடீர் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இதேவெளை சீயோன் தேவாலயத்திற்குச் பிரதமர் செல்லும் செய்தியைச் சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனினும் சுமார் 100 மீற்றர் அளவு தொலைவில் நிற்குமாறு படையினர் ஊடகவியலாளர்களுக்குப் பணித்தனர். 
பிரதமரின் விஜயத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் பொலிஸார், இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருந்தனர். 
கடந்த மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் சீயோன் தேவலயமும் உள்ளடங்குகின்றது. இந்த தாக்குதல் காரணமாக மட்டக்களப்பில் 29 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை பயங்கரவாத தாக்குதலால் சேதமடைந்த தேவாலயங்களை புனரமைப்பதற்கான பணிகளை வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் வழிகாட்டலின் கீழ் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் புனரமைப்பு பணிகளை இலங்கை இராணுவமும் அரசாங்க அபிவிருத்தி தயாரிப்பு கூட்டுத்தாபனமும் ஒன்றிணைந்து மேற்கொள்ளவுள்னது. இதற்கு தேவையான நிதியை வீடமைப்பு நிர்மாணம் மற்றும் கலாசார அமைச்சு வழங்குகவுள்ளது.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொழுது மிகவும் விரைவாகவும், தரத்தை பாதுகாக்கும் வகையிலும், உயர்தரத்திலும் இருந்த மட்டத்திலும் பார்க்க உயர்வான நிலையில் நிர்மாணித்தல் என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதற்கு வீடமைப்பு நிர்மாணம் மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்கள் தமக்கு ஆலோசனை வழங்கியிருப்பதாக அதன் செயலாளர் தெரிவித்துள்ளார்.


SHARE

Author: verified_user

0 Comments: