முஸ்லிம்களின் வியாபார நிலையங்களை தற்காலிகமாகத் தடை செய்வதற்கு மண்முனைப் பற்றுப் பிரதேச சபையில் தீர்மானம்.
பாதுகாப்புக் கருதியே இந்த நடவடிக்கை என்றும் விளக்கம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி நகரை அண்டி அமைந்துள்ள மண்முனைப் பற்றுப் பிரதேச சபையின் எல்லைக்குள் வரும் ஆரையம்பதி பிரதேசங்களில் முஸ்லிம்களால் நடத்தப்படும் வியாபார நிலையங்களைத் தற்காலிகமாகத் தடை செய்வதற்கு அச்சபையிலுள்ள தமிழ் உறுப்பினர்கள் அனைவராலும் ஏகோபித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதேவேளை அச்சபையிலுள்ள 5 முஸ்லிம் உறுப்பினர்கள் இந்த ஆலோசனையை ஆட்சேபித்து வெளியேறிய நிலையில் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் அமைதியற்ற நிலைமை காரணமாக முஸ்லிம் வியாபாரிகளின் பாதுகாப்பு கருதியே இந்தத் தற்காலிகத் தடைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்முனைப் பற்றுப் பிரதேச சபையின் 14 வது அமர்வு செவ்வாய்க்கிழமை 14.05.2019 தினம் பிரதேச சபைத் தவிசாளர் எஸ். மகேந்திரலிங்கம் தலைமையில் இடம்பெற்றபோது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் (ரீஎம்விபி) உறுப்பினர் பி.குணசேகரம் பாதுகாப்பு கருதியும் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரையிலும் ஆரையம்பதி பிரதேசத்தில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் முஸ்லீம் வர்த்தகர்களின் வர்த்தக நிலையங்களைத் தற்காலிகமாகத் தடை செய்வதற்கான பிரேரணை முன்மொழியப்பட்டது.
இதனை அச்சபையின் அனைத்து தமிழ் உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். அதனால் வாக்கெடுப்பின்றியே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், மண்முனைப் பற்று எல்லைப் புறப் பிரதேசங்களில் மக்கள் வசிக்காமல் வெறுமையாகக் காணப்படும் காணிகளின் வேலிகள் தகரங்களால் பூரணமாக மறைக்கப்படுவது நீக்கப்பட வேண்டும். வீதியில் செல்பவர்களுக்கு காணியின் நிலை தெரியும் வகையில் வேலிகள் அமைக்கப்பட வேண்டும் என்ற பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எஸ். நகுலேஸ்வரன் கொண்டு வந்தார்.
அத்துடன் வீதியோர வியாபரிகளின் வியாபாரங்களைத் தற்காலிகமாகத் தடை செய்வது தொடர்பிலும் அவரால் பிரேரணை கொண்டு வரப்பட்டது. இவையும் சபையில் சமுகமளித்திருந்த தமிழ் உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இது இன ரீதியான பாரபட்சத் தீர்மானம் என்பதால் தாங்கள் இதற்கு ஆட்சேபனை தெரிவித்து சபையை விட்டு வெளியேறியதாக அச்சபையின் 5 முஸ்லிம் உறுப்பினர்களும் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment