5 May 2019

யாழ்.பல்கலைகழக மாணவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் - வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் வேண்டுகோள்

SHARE
யாழ்.பல்கலைகழக மாணவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மட்டக்களப்பு கல்லடி வொயிஸ் ஒவ் மீடியா அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (05) இடம் பெற்ற ஊடக சந்திப்பின்போதே போது வலிந்து காணாமல் ஆக்கப் பட்டோர் சங்க தலைவி திருமதி அமலராஜ் அமலநாயகி யாழ் பல்கலைக்கழக  மாணவர்களின் கைது மற்றும் அவர்களது விடுதலை தொடர்பாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த ஊடகசந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி திருமதி அமலராஜ் அமலநாயகி இதன்போது மேலும் தெரிவிக்கையில்… பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். இம் மாணவர்கள் காணாமல் போனோரின் உரிமைக்காக குரல் கொடுத்தனரே தவிர எவ்வித பயங்கரவாத செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை. சிலர் இம் மாணவர்கள் குறித்து முகநூல் மூலமாக பொய்யான குற்றச்சாட்டுக்களையும் ஆயுதங்களையும்; வைத்திருந்ததாக விமர்சித்திருந்தனர். 

தமிழ் மக்கள் மீது அடக்கு முறையை பிரயோகிக்காது அரசும், இராணுவமும் செயற்பட வேண்டும். கடந்த பத்து வருடங்களுக்கு முன் நடந்த துயரத்தில் இருந்து மீளாத நிலையில்; அந்நிய நாடுகளின் சூழ்ச்சிக்கும் அப்பாவி தமிழ் மக்களே பாதிக்கப்படுகின்றமை மிக வேதனைக்குரிய விடயமாகும். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக போராட்டம் செய்யும் போது கேள்வி கேட்ட இராணுவம் இவ்வாறான குண்டு வெடிப்புச் சம்பவங்களை நமது பிரதேசத்திலும் அனுமதித்தது எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது. 

உண்மையில் குற்றம் செய்தவர் தண்டிக்கப்பட வேண்டும், அது எந்த இனத்தவராக இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் அப்பாவி மக்கள் மீது அடக்கு முறையை பிரயோகிப்பது தவறானது. அது மட்டுமன்றி அப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தேவையற்ற பயங்கரவாத குற்றச்சாட்டுகளுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அவர்கள் தெரிவித்திருந்தனர். 

ஆகவே, அவர்களை விடுதலை செய்து தொடர்ந்து கல்வி பயில இடமளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததுடன் கடந்த உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற சம்பவத்தில்; பாதிக்கப்பட்ட உறவுகளுக்கும், ஆழ்ந்த அனுதாபங்களை அவர் இவ் ஊடக சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: