வீடு தீப்பற்றி எரிந்து முற்றாகச் சேதம் அயல் வீடுகளுக்கும் தீ பரவும் அபாயம் மட்டக்களப்பு தீயணைப்புப் பிரிவினரின் துரித கதி நடவடிக்கையால் தவிர்க்கப்பட்டது
ஏறாவூரில் நகரில் ஞாயிற்றுக்கிழமை 31.03.2019 இரவு இடம்பெற்ற தீவிபத்துச் சம்பவமொன்றில் வீடும் அதன் உடமைகளும் முற்றாக எரிந்து சாம்பலாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் நகர மத்தி முனைவளவு வீதியை அண்டியுள்ள வீடொன்றே தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது.
அந்த வீட்டில் நீண்ட காலமாக வசித்து வந்த வாடகைக் குடியிருப்பாளர்கள் சம்பவ தினத்திற்கு முதல்நாள் ஏறாவூரிலிருந்து தம்பாளை எனும் ஊருக்குச் சென்றிருந்த வேளையிலேயே வீட்டில் எவரும் இல்லாமல் வீடு பூட்டப்பட்டுக் கிடந்த நிலையில் வீடு தீப்பற்றிக் கொண்டுள்ளது.
தீ சுவாலை விட்டு எரியத் துவங்கியதும் விபரீதம் நடப்பதை அறிந்து கொண்ட அயலவர்கள் உடனடியாக பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து மட்டக்களப்பு மாநகர சபையிலிருந்து தீயணைப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர்.
கூடவே, அயலவர்களும் பொதுமக்களும் தன்னார்வலர்களும் ஏறாவூர் நகரசபையினரும் ஸ்தலத்திற்கு விரைந்து ஏனைய வீடுகளுக்கும் தீ பரவாமல் தீயை அணைக்கும் பகீரதப் பிரயத்தனத்தில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணித்தியாலப் போராட்டத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தீ ஊர் முழுக்கப்பரவக் கூடும் என்ற அச்சத்தின் காரணமாக ஊரின் ஆற்றங்கரையோரப் பகுதியில் பெரும் பரபரப்புக் காணப்பட்டது.
தீப்பற்றிய இச்சம்பவத்திற்கான காரணம்பற்றி உடனடியாக விவரம் தெரியவராத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment