30 Apr 2019

இலங்கை வரலாற்றில் 2019 ஏப்ரல் 21ம் திகதி மற்றுமொரு இரத்தக்கறை படிந்த நாளாகும். காத்தான்குடி சிவில் அமைப்புக்களின் சம்மேளத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட பத்திரிகையாளர் மாநாடு

SHARE
இலங்கை வரலாற்றில் 2019 ஏப்ரல் 21ம் திகதி மற்றுமொரு இரத்தக்கறை படிந்த நாளாகும். காத்தான்குடி சிவில் அமைப்புக்களின் சம்மேளத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட  பத்திரிகையாளர் மாநாடு 
காத்தான்குடி சிவில் அமைப்புக்களின் சம்மேளத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட  பத்திரிகையாளர் மாநாடு இன்று (29.04.2019) பி.ப. 3.00 மணியளவில் காத்தான்குடி பீச்வே ஹோட்டலில் காத்தான்குடி சிவில் அமைப்புக்களின் சம்மேளத்தினால் ஒழுங்கு ஒழுங்கு செய்யப்பட்டு இடம்பெற்றது.

காத்தான்குடி சிவில் அமைப்புக்களின் சம்மேளத்தின் தலைவர் எம்.பி.எம். பிறதௌஸ், செயலாளர் எம்.ஏ.சி.எம்.ஜவாஹிர், சட்டத்திரணி ஏ.உவைஸ், மற்றும் யு.எல்.எம்.முபீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவித்தனர்.

இதன்போது அ;வமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…

இலங்கை வரலாற்றில் 2019 ஏப்ரல் 21ம் திகதி மற்றுமொரு இரத்தக்கறை படிந்த நாளாகும். கத்தோலிக்க மக்களின் புனித தினமான உயிர்த்த ஞாயிறு தினத்தில் திட்டமிட்டு தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட கோளைத்தனமானதும் மிலேச்சத்தனமானதுமான இக்குண்டுத்தாக்குதலுக்கு இலக்காகி உயிர்நீத்த இலங்கையர்கள், வெளிநாட்டவர்கள், பாதுகாப்பு தரப்பினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இத்தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் மிக விரைவாக குணமடைய இறைவனைப் பிராத்திக்கின்றோம். இக்கோளைத்தனமானதும் மிலேச்சத்தனமானதுமான தாக்குதல் சம்பவங்களில் தமது உறவுகளை இழந்து துயருறும் உங்கள் அனைவரது துன்பத்திலும், துயரத்திலும் நாங்களும் பங்கு கொள்கின்றோம்.

போர் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கையில் மீண்டும் குண்டு வெடிப்புக்கள், மனிதப் படுகொலைகள் தொடர்பான அச்சத்தை விதைத்துச் சென்றுள்ள இத்தாக்குதல் சம்பவங்கள் மனித குலத்திற்கு விரோதமானவையேயாகும். இலங்கையின் அமைதியையும் பல்லினத் தன்மையையும் சகிக்க முடியாத சர்வதேச தீவிரவாத சக்திகளின் சதிவலைகளில் சிக்கிய குறிப்பிட்ட சிலரது இந்த தீவிரவாத செயல் இலங்கையை மீண்டும் அச்சத்திற்குள்ளும், ஒருவரையொருவர் சந்தேகத்தோடும், பயத்தோடும் நோக்கும் நிலையை தோற்றுவித்துள்ளமையை இட்டு நாம் பெரிதும் கவலை அடைகின்றோம்.

இஸ்லாத்தின் பெயரால் இத்தாக்குதலை முன்னெடுத்த ஐளு பயங்கரவாத அமைப்பினர் எமதூரை சேர்ந்தவர்களைப் பயன்படுத்தியுள்ளமையை இட்டு நாம் வெட்கித் தலை குனிகின்றோம்.

இலங்கை முஸ்லிம்கள் கடந்த 30வருட கால யுத்தத்திலும், யுத்தத்திற்கு பின்னரும் பல்வேறு படு கொலைகள், இழப்புக்கள், பலவந்த வெளியேற்றங்களை சந்தித்த போதிலும் ஒரு போதும் வன்முறையினை நாடவில்லை என்பதனை பொறுப்புடன் ஞாபகமூட்ட விரும்புகின்றோம்.

அவ்வாறே இஸ்லாத்தைப் பொறுத்த வரையில்
“மத விடயத்தில் பலாத்காரம் இல்லை” (அத்தியாயம் 2 : 256)
“மக்கள் விசுவாசிகளாக மாற (நபியே) அவர்களை நீங்கள் நிர்ப்பந்திக்கிறீரா?” (அத்தியாயம் 10 : 99)
“அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவராக நீங்கள் இல்லை.” (அத்தியாயம் 88 : 22) “அவர்கள் அழைத்துப் பிரார்த்திப்பவற்றை (தெய்வங்களை) ஏசாதீர்கள்.” (அத்தியாயம் 6 : 108)

என்பன போன்ற வழிகாட்டல்களையே அல்குர்ஆன் எமக்குப் போதிக்கின்றது. இதற்கு மாற்றமான வன்முறையை இஸ்லாம் ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை. அந்த வகையில் கடந்த 21.04.2019 ஞாயிற்றுக்
கிழமை இடம்பெற்ற மதத்தின் பெயராலான மிலேச்சத்தனமான வன்முறைகளை மீண்டும் ஒரு முறை இலங்கை முஸ்லிம்கள் சார்பாகவும் குறிப்பாக காத்தான்குடி முஸ்லிம்கள் சார்பாகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இத்தாக்குதல் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் முஸ்லிம்கள் என்ற வகையில் இத்தாக்குதல் சம்பவங்களில் பெரிதும் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க சகோதர சகோதரிகளை அமைதிப்படுத்தி, முஸ்லிம்களை நோக்கி விரும்பத்தகாத நடவடிக்கைகள் எதுவும் இடம்பெற்று விடாமல் இருக்கவும், ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தாமல் இருக்கவும் வழிகாட்டிய பேராயர் மதிப்பிற்குரிய மல்கம் ரஞ்சித் அவர்களுக்கும், மட்டக்களப்பு கத்தோலிக்க திருச்சபையினருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்நாசகார சம்பவத்துடன் தொடர்புபட்ட பிரதான நபர் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்ற வகையில் பொதுவாக நாடு முழுவதிலும், குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள ஒரு அச்சநிலை தொடர்பிலும், சந்தேகப்பார்வை தொடர்பிலும் பதிலளிக்க வேண்டிய கடப்பாட்டினையும் நாம் கொண்டுள்ளோம்.

இத்தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் காத்தான்குடியைச் சேர்ந்த விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே ஆவர். அவர்களது எவ்வகையான தீவிரவாத நடவடிக்கைகளையும் காத்தான்குடி பொதுமக்கள் எச்சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனாலேயே இத்தாக்குதல் சம்பவங்களில் பிரதான சூத்திரதாரியும் அவருடன் தொடர்புபட்ட ஒரு சிலரும் 2017ம் ஆண்டு காத்தான்குடியை விட்டும் தலைமறைவாகினர். அத்தோடு அவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற வழக்குகளுக்கு தெரிபடாமல் ஒழிந்து வாழ்ந்தார்கள் என்பதனையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

எனவே இத்தீவிரவாத நடவடிக்கைகளுக்கு முன்னரும், பின்னரும் ஒட்டுமொத்த காத்தான்குடி மக்களின் நடவடிக்கைகள் எவ்வாறு இருந்தன என்பதனை சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் தரப்பினர் நன்கு அறிவார்கள் என்பதையும் குறிப்பிட விரும்புகின்றோம். எனவே, நாட்டின் சட்டம் ஒழுங்கைப் பேணி சமாதான சகவாழ்வினை இந்நாட்டில் வாழும் இனங்கள் மற்றும் சமயங்களுக்கூடாக கட்டியெழுப்ப கடந்த காலங்களைப் போலவே எதிர்காலத்திலும் எமது பூரண ஒத்துழைப்பினை வழங்கவும், அர்ப்பணிப்புடன் செயற்படவும் இத்தருணத்தில் காத்தான்குடி மக்களாகிய நாம் உறுதிபூணுகின்றோம்.

எனவே இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் வியாபார நிமித்தமும் கல்விசார் நடவடிக்கைளுக்காகவும், தனிப்பட்ட தேவைகளுக்காகவும் வாழும் சமாதானத்தையும், அமைதியையும் விரும்பும் காத்தான்குடி வாசிகளுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வண்ணம் செயற்படுமாறு, சந்தேகம் ஏற்படுமிடத்து அதனை உரிய சட்ட ஏற்பாடுகளுக்கூடாக கையாளுமாறும் எச்சந்தர்ப்பத்திலும் வன்முறையை கையிலெடுக்க வேண்டாம் என்றும் இலங்கை பிரஜைகள் அனைவரையும் இப்பத்திரிகைளாளர் மாநாட்டினூடாக மிக்க வினயமாகக் கேட்டுக் கொள்கின்றோம்.

விரும்பத்தகாத இச்சம்பவங்கள் நமது இலங்கை தாய்நாட்டிற்கு ஏற்படுத்தியுள்ள அழிவு, பொருளாதார வீழ்ச்சி என்பவற்றிலிருந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப இலங்கையர்கள் என்ற வகையில் உங்கள் அனைவருடனும் காத்தான்குடி மக்களாகிய நாமும் கைகோர்க்கத் தயாராய் உள்ளோம் என்பதனையும் அதற்கு எதிராக எழும் அனைத்து வகையான சவால்களையும் முறியடிக்க உங்கள் அனைவருடனும் கைகோர்க்கின்றோம் என்பதனையும் இப்பத்திரிகையாளர் மாநாட்டிற்கூடாக தெரிவித்துக் கொள்கின்றோம். என அதில் குறிப்பிட்டுள்ளனர்.













SHARE

Author: verified_user

0 Comments: