மட்டக்களப்பு - முறக்கொட்டான் சேனை இராணுவ முகாமை அகற்றி, முகாமினுள் உள்ள பாடசாலைக் கட்டடத்தை விடுவித்துத் தருமாறும் மக்கள் போக்குவரத்துக்குரிய வீதியைத் திறந்து தருமாறு கோரியும், குறித்த இராணுவ முகாமுக்கு முன்பாக, பிரதேச மக்களால் இன்று (08)காலை கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
முறக்கொட்டான் சேனை, தேவபுரம் கிராம சமூக அமைப்புகளின் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போராட்டத்தில், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், கோறளைப்பற்று பிரதேச சபை உப்பினர்களான க.கமலேஸ்வரன், கு.குணசேகரம், சு.சுதர்ஷன் ஆகியோர்களும் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான வீதியில், இராணுவ முகாமுக்கு முன்பாக கூடிய பொதுமக்கள், “எமது காணி எமக்கு வேண்டும்”, “இராணுவமே வெளியேறு”, “பாடசாலைக் காணியை உடன் விடுவி” போன்ற தங்களின் கோரிக்கை அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு, கோஷமிட்டனர்.
குறித்த போராட்டத்தின் முடிவின்போது, ஜனாதிபதிக்கும் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசாங்க அதிபருக்கும் தங்களின் கோரிக்கை அடங்கிய மகஜரை, வியாழேந்திரன் எம்.பியிடம் பொதுமக்களின் பிரதிநிதிகள் கையளித்தனர்.
0 Comments:
Post a Comment