ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு உடனடியாகத் தொழில் வாய்ப்புதொழிற்பாதை வழிகாட்டல் தேசிய திட்ட ஆரம்ப தலைவர் உறுதியளிப்பு
ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகளுக்கு உடனடியாகத் தொழில் வாய்ப்பை வழங்கக் கூடிய தொழிற்பாதை வழிகாட்டல் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக
தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் ; National
Apprentice and Industrial Training Authority (NAITA) புதிய தலைவரான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
இளைஞர்களுக்கான தொழிற்பாதை வழிகாட்டல் தேசிய திட்டத்தின் முதலாவது நிகழ்வு ஏறாவூரில் சனிக்கிழமை 16.03.2019 ஆரம்பித்து வைக்கப்பட்டபோது அவர் இந்த விவரங்களை வெளியிட்டார்.
ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அங்கு பயிலுநர்கள், தொழிற் பயிற்சிகளை எதிர்பார்த்திருக்கும் ஆர்வமுள்ள இளைஞர் யுவதிகள், அதிகாரிகள் பிரமுகர்கள் உள்ளிட்டோர் மத்தியில் அவர்உரையாற்றினார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், பிரதம மந்திரியின் 10 இலட்சம் இளைஞர் யுவதிகளுக்குத் தொழில் வாய்ப்புக்களை வழங்கும் உத்தேச திட்டத்திற்கிணங்க நைற்றா மூலமாக ஒரு இலட்சம் இளைஞர் யுவதிகள் பயிற்சி நெறிகளுக்காக உள்ளீர்க்கப்பட்டு அவர்களுக்கு தொழில் உத்தரவாதமும் வழங்கப்படவுள்ளது.
இது இளைஞர் யுவதிகளுக்கான ஒரு புது யுகமாகப் பார்க்கப்படுகின்றது.
NAITAவின் வெவ்வேறு கற்கைகளுக்காக நாட்டின் அனைத்து பாகங்களிலுமிருந்தும் இளைஞர் யுவதிகளை இணைத்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளுவதற்கான பயிற்சிகள் வழங்கப்படும்.
பயிற்சியின் பின்னர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள கூடிய அரச அங்கீகாரம் கொண்டு சான்றிதழ் வழங்கப்படும்.
நைற்றா வெறுமனே சான்றிதழ்களை வழங்கும் நிறுவனமாக இருந்த நிலைமையை மாற்றி சான்றிதழுடன் தொழில் வாய்ப்பு உத்தரவாதப்படுத்தப்பட்ட பயிற்சி நெறிகளை நாம் வழங்கவுள்ளோம்.
நாட்டிலே எந்த வித தொழில் வாய்ப்பும் இல்லாமல் நம்பிக்கையற்ற நிலையில் தத்தளிக்கின்ற கலைப் பட்டதாரிகள் சுமார் 10 ஆயிரம் பேருக்கும் வேலைவாய்ப்புக்கள் கிடைக்கவுள்ளன.
நைற்றா வேறு தகவல் தொழினுட்ப நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களைச் செய்து நைற்றாவும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும் இணைந்து ஒன்றரை வருடங்களுக்கு பயிற்சியளிக்கவுள்ளன.
மாதாந்தம் 35000 ஆயிரம் ரூபா கொடுப்பனவுடன் அவர்கள் தங்கள் பயிற்சிகளையும் பெற்று பயிற்சியின் நிறைவில் சுமார் 80 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் அவர்கள் தொழில் வாய்ப்புக்களைப் பெறவுள்ளார்கள்.
இதற்கான ஒப்பந்தங்கள் வெகு விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளன.
மேலும், இதுபோன்று அவுஸ்திரேலியா, கனடா, ஜேர்மன், பிரிட்டன், ஐக்கிய அரபு இராஜ்ஜியம், மலேசியா, சீனா, பிலிப்பைன்ஸ், ஜப்பான் மற்றும் கொரியா போன்ற நாடுகளிலுள்ள தனியார் பல்கலைக்கழகங்களிலும்; நைற்றாவில் பயிலும் மாணவர்கள் மேலதிக பயிற்சிகளையும் கல்விகளையும் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் அந்தந்த நாட்டுக்குப் பெறுப்பான தூதரகங்களின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நடாத்தப்பட்டு உடன்பாடுகள் எட்டப்படும்.
இவையாவும் இவ்வருடத்துக்குள் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
0 Comments:
Post a Comment