மட்டக்களப்பு மாவட்ட கால்நடைப் பண்ணையாளர்களுக்கும் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கால்நடைப்பண்ணையாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று திங்கட்கிழமை(25) பிற்பகல் 2.00 மணியளவில் மாவட்ட செயலக மண்டபத்தில் மாவட்ட அரச அதிபர் மா.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
அரச அதிபரின் எண்ணக்கருவிற்கு ஏற்ப கால்நடை பண்ணையாளர்களுக்கிடையில் காணப்படுகின்ற பிரச்சனைகள் பற்றியும், கால்நடை வளர்ப்பில் அவர்கள் எதிர்நோக்குகின்ற சவால்கள், எதிர்காலத்தில் அவர்களுடைய பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் முகமாகவே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டமானது கால்நடை மற்றும் பால் உற்பத்தி ஆகியவற்றில் அதிக அக்கறை காட்டும் மாவட்டமாக காணப்படுகின்றது. அதனடிப்படையில் அதன் மாகாண திணைக்களம் அவற்றிலே காணப்படுகின்ற பிரச்சனைகளை கலந்துரையாடல் செய்து தீர்வுகளை வழங்கும் முயற்சியின் ஒரு கட்டமாக இந்த கூட்டம் நடைபெற்றது.
கால்நடைப்பிரச்சனைகள் சம்பந்தமாக கால்நடை வைத்தியர்கள், மற்றும் அதனை சார்ந்த அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், பாலுற்பத்தியாளர்கள் எதிர்நோக்குகின்ற விலை நிர்ணய பிரச்சனைகள் , கால்நடைவளர்ப்பாளர்கள் சந்திக்கும் பாரியபிரச்சனையான கால்நடைகளுக்கு உண்டாகும் நோய்கள், அதனை தீர்த்து வைக்க கால்நடை வெளிக்கள உத்தியோகஸ்த்தர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறைவாக காணப்படுவதற்கான காரணங்கள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கு வழங்கப்படுகின்ற இழப்பீடுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
மாடுகளுக்கு ஏற்படக்கூடிய பல்வேறு நோய்களும், அதற்கான காரணங்களும் விவாதிக்கப்பட்டன. ஆய்வுக்கூட முடிவுகளின் படி தொண்டை அடைப்பான், கால்வாய் நோய்,கருங்காலி நோய் ,குடல் புழு நோய் ஆகியனவே மாடுகளை பாதிக்கும் நோய்களாகும். கால்நடைவளர்ப்பாளர்கள் மாடுகளை பராமரிப்பதில் காட்டும் அசமந்த போக்கு , தடுப்பூசி ஏற்றுவதற்கு ஒத்துழையாமை,முறையான கழிவகற்றல் இல்லாமை , விழிப்புணர்வு கருத்தரங்குகளில் கலந்து கொள்ளாமை, காலநிலை மாற்றத்தினால் நீர்நிலைகள் மூடப்பட்டமை , பெரும்பாலான இடங்களில் இம்முறை நெற்பயிர்ச்செய்கை செய்யப்பட்டமையால் மேய்ச்சற்தரை குறைவடைந்தமை , காட்டுபகுதிகளில் மேய்ச்சலிற்கு தடை விதிக்கப்பட்டமை , போதிய மேய்ச்சற்தரை இல்லாமையால் கால்நடைகள் நீண்ட தூரம் நடத்தி செல்லப்பட்டமை ஆகிய காரணங்களினாலேயே இந்நோய்கள் பரவலாக மாடுகளை பாதிக்கின்றன. எனவே பண்ணையாளர்கள் இவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தினால் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது
மட்டக்களப்பில் கிரான் பிரதேசத்தில் அமைந்துள்ள மயிலத்தமடு ,வடமுனை , கள்ளிச்சை ஆகிய இடங்களிலும் கரடியனாறு பிரதேசத்தில் அமைந்துள்ள காரமலை என்ற பிரதேசத்திலுமே பாதிப்புகளை அதிகமாக காணப்படுகின்றன. இதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டு தீர்வுகளையும் அதற்கான நடைமுறைத்திட்டங்களும் திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த் , மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.நவரூபரஞ்சினி முகுந்தன்(காணி),கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் திருமதி குகேந்திரன் ,விலங்கு புலனாய்வு துறை அதிகாரி வைத்தியர் ஜி.மயூரதி , மாகாண பிரதி பணிப்பாளர் அபூபக்கர் ,மாவட்ட விவசாய பணிப்பாளர் வை பி .இக்பால் பிரதேச செயலாளர்கள், கால்நடை வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் , பண்ணையாளர்கள் , பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment