3 Mar 2019

மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் 5405 ஏக்கரில் நெற்செய்கை செய்ய தீர்மானம்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின், மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் 5405 ஏக்கரில் 2019ம் ஆண்டு சிறுபோகத்தில் நெற்செய்கை செய்வதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்கான சிறுபோக நெற்செய்கை முன்னோடிக்கூட்டம் சனிக்கிழமை மாலை (02) மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில்,  கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றபோதே இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பட்டிருப்பு நீர்பாசன பிரிவிற்குட்பட்ட, புளுகுணாவை, கங்காணியார், அடைச்சகல், கடுக்காமுனை, சேவகப்பற்று, மகிழடித்தீவு ஆகிய குளங்களில் உள்ள நீர்மட்டத்தினைக் கொண்டே, குறித்த அளவிலான நெற்செய்கை மேற்கொள்ளப்படவிருப்பதாக பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் செ.சுபாஹரன் குறிப்பிட்டார். மேலும் விவசாய வேலைகள் அனைத்தும் 03.03.2019ம் திகதி ஆரம்பிக்கப்பட்டு, 18.03ல் நெல்விதைப்பு இடம்பெறவேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கால்நடை உரிமையாளர்கள் தங்களது மாடுகளை, புளுகுணாவை, மணல்ஏத்தம், காத்த மல்லியர்சேனை போன்ற பகுதி மேச்சல்தரைப்பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டுமென்று கூறப்பட்டதுடன், களைக்கட்டுப்பாடு, உரமானியம், காப்புறுதி, அனர்த்த நிலைமைகள், வங்கிகளுடனான கடன், விதைநெல் போன்றவிடயங்கள் பற்றியும் இதன்போது விவசாயிகளுக்கு தெளிவூட்டப்பட்டது.

சிறுபோகத்தில், விளைச்சலை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளவேண்டிய செயற்பாடு தொடர்பிலும் கூறப்பட்டதுடன்,  படைப்புழுவின் தாக்கம் நெற்செய்கையையும் பாதிப்புறச்செய்யக்கூடும் அதுபற்றி அதிக அவதானம் செலுத்துமாறும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இவ் ஒன்றுகூடலில் பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ், விவசாய திணைக்கள உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.






SHARE

Author: verified_user

0 Comments: