21 Feb 2019

கிழக்கு மாகாணம் கல்வியில் மோசமான பின்னடைவைக் கண்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன்

SHARE
கிழக்கு மாகாணம் கல்வியில் மோசமான பின்னடைவைக் கண்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் 
அண்மையில் வெளியாகிய க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளின்படி கிழக்கு மாகாண மோசமான பின்னிடைவை கண்டுள்ளதோடு மாகாண ரீதியில் இறுதியான 9வது இடத்திற்கு பின் தள்ளப்பட்டிருக்கிறது. இந்த நிலமைக்கு மாகாணத்தின் வினைத்திறனற்ற கல்வித்தலைமைத்துவமே பொறுப்புக் கூறவேண்டும் என  இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

கிழக்கு மாகாண கல்வி வீழ்ச்சி தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் வியாழக்கிழமை (21.02.2019) ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
“மாவட்ட ரீதியில் வர்த்தகப் பிரிவில் மட்டக்களப்பு மாவட்டம் 20வது நிலைக்கும் திருகோணமலை மாவட்டம் 23வது நிலைக்கும் அம்பாறை மாவட்டம் 25வது நிலைக்கும் பின்னோக்கி தள்ளப்பட்டிருப்பதோடு, கலைப்பிரிவில் திருகோணமலை மாவட்டம் 22வது நிலையையும் மட்டக்களப்பு மாவட்டம் இறுதி நிலையான 25வது இடத்திற்கும் தள்ளப்பட்டிருப்பதற்கு வினைத்திறனற்ற கல்வித் தலைமைத்துவமே காரணம்.

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கு தகுதிபெற்றுள்ள மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டம் 23வது நிலையையும் திருகோணமலை மாவட்டம் 25வது நிலையையும் அடைந்துள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு திறமை அடிப்படையில் மருத்துவம், பொறியியல் துறைகள் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் பெரும் பின்னிடைவைக் கண்டுள்ளன. மற்றும் பிரபலமான தேசிய பாடசாலைகளின் விஞ்ஞான, கணிதத்துறைகளின் பரீட்சை பெறுபேறுகள் வீழ்ச்சி கண்டுள்ளன.

பாடத்துறைகளுக்கான கல்வி நிருவாக சேவை உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் நியமிக்கப்படிருந்தும் தேசிய கல்விக்கொள்கைக்கு அமைவான வினைத்திறனான மேற்பார்வைகள் மேற்கொள்ளப்படுவதில்லை.

கிழக்கு மாகாணத்தில் கல்விப் புலத்தில் அதிகாரப்போட்டி உச்ச வரம்பை எட்டியுள்ளதோடு அண்மையில் வேலைப்பகிர்வு தொடர்பாக ஏற்பட்ட போட்டியில் கல்வி அதிகாரி ஒருவர் மயக்கமுற்று விழுந்த சம்பவமானது மிகவும் கலைக்குரியது.
கிழக்கு மாகாணத்தில் சிரேஸ்ட தரத்தில் இரு கல்விச் செயலாளர்களும் கனிஸ்ட தரத்தில் ஒரு செயலாளரும் பிரதிக் கல்விச் செயலாளராக மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் இருந்தும் கல்வி மிகவும் பின்னடைவைச் சந்தித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

கிழக்கு மாகண புதிய ஆளுனர் கல்விச் செயற்பாடுகளைச் முன்னெடுப்பதில் கவனம் செலுத்தாது, அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதும் கல்வியினை அரசியல் மயப்படுத்துவதையும் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


SHARE

Author: verified_user

0 Comments: