தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் புதிய தலைவர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்
சர்வதேச உத்தரவாத தொழிற் தகைமையுடன் நிபுணத்துவ துறைசார்ந்த தொழிற்துறைகளில் நாட்டின் இளைஞர் யுவதிகளைப் பயிற்றுவிக்க வேண்டும் என தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் National Apprentice and Industrial Training Authority (NAITA) G புதிய தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் புதிய தலைவராக புதன்கிழமை 20.02.2019 நியமனத்தைப் பெற்றுக் கொண்ட அவர் கருத்துவெளிடும்போது இதனைத் தெரிவித்தார்.
இதுபற்றி மேலும் கூறிய அவர்,
பின்தங்கிய கிராமங்கள் என்ற அடைமொழியுடன் கிராமங்களைத் தொடர்ந்தும் பின்தள்ளி வைக்காமல் வீட்டுக்கொரு தொழில்வாய்ப்பை உருவாக்கி கைத்தொழில் கிராமங்களாக மலரச் செய்வதை இலக்காகக் கொண்டு தான் செயற்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
பின்தங்கிய கிராம மக்களே பொருளாதார, உட்கட்டுமான. கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் என்று எல்லா வகையான பாரபட்சங்களுக்கும் முகம் கொடுத்து வருவதால் கிராமங்களிலேயே கைத்தொழில் பேட்டைகள் உருவாக்கப்பட வேண்டும்.
கைத்தொழில் பேட்டைகளை அமைக்கும் திட்டத்தை நான் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்தபோது அந்த மாகாணத்தின் சகல இன மக்கள் வாழும் எல்லா மூலை முடுக்களிலும்சென்று அபிவிருத்திக்கான திட்டங்களை வகுத்து அவற்றில் சிலவற்றை செயல்படுத்தியும் காட்டினேன்.
திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் இந்த கைத்தொழில் பேட்டைகள் இயங்கி வருகின்றன.
ஏற்கெனவே சுமார் 10 ஆயிரம் பேருக்கான நேரடி மற்றும் மறைமுக தொழில்வாய்ப்புடன் ஏறாவூரில் சர்வதேச தரத்திலான 3 ஆடைத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இதில் கூடுதலான அளவு தமிழ் இளைஞர் யுவதிகளும், மற்றும் முஸ்லிம் சிங்கள சமூகங்களைச் சேர்ந்தோரும் தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுள்ளார்கள்.
ஏறாவூரில் இன்னும் ஒரு தொழிற்சாலை நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. அதுவும் இயங்கத் தொடங்கி விட்டால் சர்வதேச உத்தரவாத தொழிற் தகைமையுடன் பயிற்சி பெற்ற சுமார் 1000 பேருக்கான தொழிற் பேட்டையாக அது விளங்கும்.
இதனுடன் இணைந்ததாக கிராமங்களில் வட்டியில்லாக் கடன் மூலம் சிறு கைத்தொழில்களை ஆரம்பித்து இளைஞர் யுவதிகளுக்கு பொருளாதமார வளத்தை ஏற்படுத்தும் திட்டங்களும் அமுல்படுத்தப்படவுள்ளன.
இத்தகைய திட்டங்கள் மூலமே கிராம வறுமையைக் குறைத்து வளமான பொருளாதாரத்தின் பங்காளிகளாக பின் தங்கிய கிராமங்களை மாற்ற முடியும்.
சிறந்த தொழிற்பயிற்றி பெற்ற இளைஞர் யுவதிகளை உருவாக்குவோமேயானால் நாட்டின் மனித வளத்தை சிறந்த முறையில் பயன்படுத்தி பொருளாதாரத்தை ஈட்டி நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தையும் வளம் மிக்கதாக மாற்ற முடியும். இனவாதம் பேசுவோர் நாட்டின் அனைத்து சமூக இளைஞர் யுவதிகளின் பெறுமதி அளவிடமுடியாத மனித வளத்தையும் அவர்களது எதிர்காலத்தையும் வீணடிக்க இனி இடம் கொடுக்கக் கூடாது”என்றார்.
0 Comments:
Post a Comment