(திலக்ஸ் ரெட்ணம்)
இந்த உலகம் பல்வேறு உயிரின சூழல்களால் நிறைந்தது. தொன்மையான மொழிகளையும், நாகரிகங்களையும் தன்னகத்தே கொண்டு காலம் காலமாய் சர்வ கணங்களிலும் பரிணாமத்தின் புள்ளியில் தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருக்கின்றது. கடந்த காலங்களிலும், தற்போதைய காலங்களிலும் அபிவிருத்தியை கண்டது இலங்கை நாடு. அதிலும் கடந்த ஆட்சியின் போது துரிதமாக பல துறைகளிலும் அபிவிருத்தி பெற்றது. அதிகமான பிரதேசங்களில் உட்கட்டுமான பணிகளினூடாக மக்களின் பல தேவைகள் நிறைவேற்றப்பட்டது.
ஆதிமனித காலம் கடந்த நிலையில் மனித நாகரிகத்தின் தொடக்கத்தில் அனைத்துப் பகுதிகளிலும் ஒருபொருளை வாங்குவதற்கும், விற்பதற்கும் ஆரம்பிக்கப்பட்ட ஒரு வியாபார முறைதான் சந்தை என்பது. நெல்லை கொடுத்து பருப்பு வாங்கியதும், தயிரை கொடுத்து மீனை வாங்கியதும், உப்பு கொடுத்து அரிசி வாங்கியதும் சந்தைப்பாரம்பரியத்தின் ஒரு பகுதி. ஏன்? நம்முடைய கிராமத்து முடுக்குகளில் எங்கும் சுட்ட கிழங்கும், சோளமும், கள்ளும், கருவாட்டின் மணமும் பரிமாறிக் கொள்ளப்பட்டதை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த வகையில் சந்தை என்பது மனிதனின் வாழ்வியலில் மிகவும் முக்கியமானதொன்றாக கருதப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரை பிரதேசத்தில் போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசத்தில் பிரதேச சபைக்கு உரித்தான பழுகாமம், பெரிய போரதீவு, மண்டூர், பாலையடிவட்டை ஆகிய நான்கு பொதுச்சந்தைகளில் இரண்டு பற்றைக்காடுகளால் சூழப்பட்டு மந்தைகளின் தரிப்பிடமாகவும், 01 கவனிப்பாரற்றும், பழுகாமம் சந்தை கட்டடிடம் இல்லாமல் ஆக்கப்பட்டும் விட்டுள்ளமை மிகவும் கவலைக்கிடமான ஒரு விடயம்.
இப்பிரதேசத்தை பொறுத்தமட்டில் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டுமாயின் பலமைல் தூரங்கள் கடந்து களுவாஞ்சிகுடி, கல்முனை போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலைதான் உள்ளது. பல்லாயிரக்கணக்கான நிதியினை செலவழித்து நிர்மாணிக்கப்பட்ட இவ்வாறான கட்டடங்களை அரச நிறுவனங்கள் மக்கள் பாவனைக்காக சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
பாலையடிவட்டை பொதுச்சந்தையும், பெரிய போரதீவு பொதுச்சந்தையும் பற்றைக்காடுகளால் மூடப்பட்டு மந்தைகளின் வாழ்விடங்களாக காணப்படுகின்றது. மண்டூர் சந்தை கட்டடத்தில் ஓரிரு விற்பனையாளர்கள் விற்பனை செய்கின்றனர். பழுகாமம் சந்தை கட்டிடம் இருந்த வளாகத்தில் கட்டடத்தை அகற்றி விட்டு கலாசார மண்டபம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தற்போது போரதீவு சந்தி சந்தையாக மாறிவருகின்றமை கண்கூடு.
எமது பகுதி மக்களால் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களை இப்பிரதேசத்தில் வணிகம் செய்ய முடியாமல் ஏனைய பகுதிகளுக்கு கொண்டு சென்று குறைந்த விலையில் கொடுத்து விட்டு அப்பொருளை வாங்கிய முதலாளிகள் அதிகப்படியான விலைகளுக்கு விற்று அதிக இலாபம் ஈட்டும் போது வெயிலிலும், மழையிலும் அல்லலுற்று கிடந்து உற்பத்தி செய்கின்ற தொழிலாளி மிகவும் குறைந்த இலாபத்துடன் தொடர்ந்தும் தொழிலாளியாகவே தன் வாழ்நாளை கழிக்கின்றான் என்பதே மிகவும் வேதனையான விடயம்.
மக்கள் தாம் உற்பத்தி செய்கின்ற பொருளை விற்பனை செய்வதற்கு அவர்களுக்கான களம் ஒன்றை அமைத்து கொடுக்கின்ற போது அவர்களாகவே சந்தைகளில் கொண்டு விற்று அதிக இலாபத்தினை ஈட்டக்கூடியவாறு அமையும். மக்கள் வீண் பிரயாண செலவு, வீண் அலைச்சல் என்று மக்கள் பல இன்னல்களுக்கு முகங்கொடுக்கின்றனர். இவ்வாறான சந்தைகளை நடைமுறைப்படுத்தும் போது இப்பிரதேச மக்கள் அதிக நன்மையும் அடைவார்கள்.
போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட நான்கு சந்தைகளையும் வாரத்தில் ஓர் நாள் அல்லது தினந்தோறும் நடைமுறைப்படுத்தினால் பிரதேச சபையும் வருமானத்தை ஈட்டக்கூடியவாறு அமையும்.
இச்சந்தை கட்டிடங்கள் பல வருடங்களாக இயங்காமல் உள்ளது. தற்போது உருவாகியுள்ள பிரதேச சபை மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய குழு இதனை தங்களது பிரேரணையாக பெற்று மக்கள் நலன் பெறும் செயற்பாட்டை முன்னெடுத்து பற்றைக்காடுகளாக மண்டிக்கிடக்கும் சந்தைக் கட்டிடங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவருவார்களா? என்பதே வினாக்குறியாக மக்களிடையே உள்ளது. இந்த மக்கள் பிரதிநிதிகளும் தங்கள் ஆசனங்களை பாதுகாக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்தி பழைய பல்லவியினை வாசிப்பார்களா? என மக்கள் மிகவும் அவதானத்துடன் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர். தற்போது மக்கள் அனைத்தையும் அறிந்துகொண்டு எதிரான கேள்விக்கணைகளை அரச அதிகாரிகளிடமும், அரசியல் வாதிகளிடமும் கேட்டுக்கொண்டு வருகின்றனர். அரச அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் மக்கள் நலன் சார்ந்து சேவை புரிவதனூடாக மக்களின் தேவைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு விடும். இந்த போரதீவுப்பற்று பிரதேச சபையை பொறுத்தமட்டடில் சிறப்பாக மக்களுக்கான சேவையை புரிந்து வருகின்றது. இந்த மக்கள் மனுவையும் சிரமேற் கொண்டு செயற்படுவார்கள் என்பதில் ஐயப்பாடில்லை.
0 Comments:
Post a Comment