மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அதிபர் அலுவலகம் ஒழுங்கமைப்பு போட்டியில் மரப்பாலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலயம், கன்னன்குடா மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகள் முதலிடங்களைப் பெற்றுள்ளதாக வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் தெரிவித்தார்.
ஆவணங்களை ஒழுங்குபடுத்தி முறையாக பேணுதலை ஊக்குப்படுத்தும் வகையிலும், உற்பத்தித்திறனை மேம்படுத்தும் நோக்கிலும், அதிபர்களின் ஆளுமையைவிருத்தி செய்யும் பொருட்டும் இப்போட்டி நடாத்தப்பட்டது.
ஆரம்பப்பிரிவு, இடைநிலைப்பிரிவு, உயர்நிலைப்பிரிவு எனும் மூன்று பிரிவு பாடசாலைகளிடையே நடாத்தப்பட்ட போட்டியில், ஆரம்பப்பிரிவு பாடசாலைகளில் மரப்பாலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை முதலாம் இடத்தையும், முதலைக்குடா கனிஸ்ட வித்தியாலயம் இரண்டாம் இடத்தையும், மணிபுரம் விக்னேஸ்வரா வித்தியாலயம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன. இடைநிலைப்பிரிவில் காஞ்சிரங்குடா காமாட்சி வித்தியாலயம் முதலிடத்தையும், காயன்குடா கண்ணகி வித்தியாலயம் இரண்டாம் இடத்தையும், உன்னிச்சை 8 ஆம் கட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன. உயர்நிலை பாடசாலைகளில் கன்னன்குடா மகா வித்தியாலயம் முதலிடத்தையும், கொக்கட்டிச்சோலை இராமகிருஸ்ணமிசன் வித்தியாலயம் இரண்டாம் இடத்தையும், மகிழடித்தீவு சரஸ்வதி வித்தியாலயம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளன.
இப்போட்டிக்காக மொத்தமாக 250 புள்ளிகள் வழங்கப்பட்டு, அதிபர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஆவணங்கள், நேர்த்தி, உற்பத்தி திறன் போன்ற பல விடயங்கள் பார்வையிடப்பட்டு பாடசாலைகளின் நிலைகள் வெளியிடப்பட்டதாகவும், வருடாந்தம் இப்போட்டி நடாத்தப்படவுள்ளதாகவும் வலயக்கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment