ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலை கிரான் பகுதியில் திங்கட்கிழமை 25.06.2018 நள்ளிரவு இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதோடு மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அதி சொகுசு தனியார் பஸ்ஸ{ம் வாழைச்சேனைப் பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த சிறிய ரக வேனும் மோதிக் கொண்டதில் இந்த விபத்துச் சம்பவித்துள்ளது.
இதில் வேனைச் செலுத்திச் சென்ற சாரதி வினோஜன் (வயது 25) மற்றும் அதே வேனில் பயணித்த பிரகாஷ் கெல்வின் (வயது 11) எனும் சிறுவனும் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளனர். மற்றும் அதே வேனில் பயணித்த மூவர் படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்கள்.
உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த உதவுவோரும் மற்றும் பொலிஸாரும் விபத்தில் சிக்கி நொறுங்கிப் போன நிலையிருந்த வேனிலிருந்து சடலங்களை மீட்டெடுப்பதிலும் காயம் பட்டோரை வெளியே எடுப்பதிலும் ஈடுபட்டனர்.
இடம்பெற்றிருந்த கோரமான விபத்து தம்மையே உறைய வைத்து விட்டதாக மீட்புப் பணிகளுக்கும் விசாரணைக்கும் சென்ற பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேன் சாரதி மரணமடைந்த வேனின் கதவுக்குள் சிக்கியிருந்த நிலையில் பெருஞ் சிரமத்தின் மத்தியில் வேனின் கதவை கோடரியினால் கொத்தி சிதைத்து சடலத்தை வெளியே எடுப்பதில் அதிக சிரமப்பட வேண்டியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ் மற்றும் வேன் சாரதிகளின் கட்டுப்பாட்டை மீறிய வேகம், மற்றும் தடுமாற்றத்தின் காரணமாக இவ்விபத்து நேர்ந்திருப்பது தமது ஆரம்பக் கட்ட விசாரணைகளிலிருந்து அறிய வந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.
0 Comments:
Post a Comment