நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் முன்மாதிரியான அரசியல் நடை முறைகளை ஏனைய மக்கள் பிரதிநிதிகள் சிலரும் அமுல்படுத்துவதை நோக்கும்போது மகிழ்ச்சியளிப்பதாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஸ்தாபக அங்கத்தவரும் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான எம். சபீல் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நீண்ட காலமாக நடைமுறைப்படுத்தி வரும் திட்டங்களைப் போலவே, தனக்குக் கிடைத்த நகரசபைக் கொடுப்பனவை சொந்தமாக்கிக் கொள்ளாமல் நகரசபை பொது நிதிக்கே மீண்டும் ஒப்படைத்துள்ளார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த காத்தான்குடி நகர சபை உறுப்பிரான ஷிப்லி பாறூக்.
அவரின் நடவடிக்கையை நான் வெகுவாகப் பாராட்டுகின்றேன்.
கடந்த 12 வருடங்களாக இது போன்ற பல முன்மாதிரிகளை கொள்கையாகவும் நடமுறையாகவும் கொண்டுள்ள எமது கட்சி ஏனையோர்களும் இது போன்று முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் எதிர்பார்த்து வந்துள்ளது.
அரசியல் என்பது மக்களுக்கானதாகும். அரசியலில் கிடைக்கும் பதவிகள் பொறுப்புக் கூறலுக்கானவையாகவே உள்ளன.
அதனைப் பயன்படுத்தி சொந்த இலாபங்களையோ அல்லது சொந்த அனுபவிப்புக்களையோ செய்வதனை அனுமதிக்க முடியாது.
முழுக்க முழுக்க மக்கள் நலனுக்காக மாத்திரமே அரசியல் அதிகாரம் பாவிக்கப்பட வேண்டும் என்பதனை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கொள்கையாகக் கொண்டுள்ளது.
துஷ்பிரயோகங்களும் ஊழல் மோசடிகளும் நிறைந்த சமகால அரசியல் சூழ்நிலையில் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்றால் அதற்காக முற்போக்கான கொள்கைகள் அமுல்படுத்தப்பட வேண்டும்.
மக்கள் பிரதி நிதிகளாக பதவி வகிப்பவர்கள் அப்பதவி மூலம் கிடைக்கும் கொடுப்பனவுகளையோ அல்லது ஏனைய சலுகைகளையோ சொந்த இலாபமாக மாற்ற முடியாது என்பதும் அவை அனைத்தும் மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அடிப்படைக் கொள்கையாகும்.
2006 இல் எமது கட்சி ஆரம்பிக்கப்பட்டது முதல் இந்தக் கொள்கை இன்று வரை அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
காத்தான்குடி நகர சபையில் ஆரம்பத்தில் ஒரு பிரதிநிதியும் அதன் பின்னர் இருவரும் தற்போது நான்கு பிரதிநிதிகளும் என எமது பிரதிநிதிகள் காணப்படுகின்றனர். இவர்கள் எவரும் தமக்குக் கிடைக்கும் கொடுப்பனவுகள் எதனையும் சொந்தமாக எடுத்துக் கொள்வதில்லை. அவை கட்சியின் தீரமானத்திற்கமைவாக பொது நலன்களுக்காகவே செலவு செய்யப்படுகின்றன.
கடந்த நகர சபைக் காலத்தில் மானிய அடிப்படையில் உள்ளுராட்சி உறுப்பினர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
காத்தான்குடி நகர சபையின் சகல உறுப்பினர்களும் அவற்றை சொந்தமாக்கிக் கொண்டனர். ஆனாலும், எமது பிரதிநிதிகள் மாத்திரம் தமது சொந்தப் பணத்தையும் செலவழித்தே அந்த மோட்டார் சைக்கிள்களை அவர்கள் பெற்றுக் கொண்டிருந்த போதிலும், கட்சியின் கொள்கைக்கு அமைவாக கட்சியிடமே அவற்றை ஒப்படைத்தனர்.
தற்போது நாடெங்கிலும் 18 உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ள எமது கட்சி இதே முன்மாதிரியையே சகல இடங்களிலும் அமுல்படுத்தி வருகின்றது.”
0 Comments:
Post a Comment