சமாதான சகவாழ்வுச் செயற்பாடுகளில் சிரேஷ்ட பிரஜைகள் அனுபவஸ்தர்கள் மாத்திரமல்லாது கூடுதலாக இளைஞர் யுவதிகளும் பெண்களும் நல்லிணக்கச் செயற்பாடுகளில் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என ஆசிய மன்றத்தின் சிரேஷ்ட நிகழ்சித் திட்ட அதிகாரி கமாயா ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
தேசிய சமாதானப் பேரவையின் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட கலந்துரையாடல் மட்டக்களப்பு கிறீன் கார்டன் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை 13.05.2018 இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவையின் மாவட்ட இணைப்பாளர் இராசையா மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் சம்சுதீன் ஷாபி நயாஜ், மாவட்டத்திலுள்ள தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களைப் பிரதிநிதித்துவப்புடுத்தும் இந்து இஸ்லாமிய, கிறிஸ்தவ பௌத்த சமயங்களைச் சேர்ந்த சமாதான சௌஜன்ய செயற்பாட்டாளர்கள் சுமார் 40 பேர் கலந்து கொண்டனர்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய கமாயா மேலும் கூறியதாவது,
இன ஐக்கிய சமாதான செயற்பாடுகளில் அனைவரும் கூட்டாகப் பயணிப்பதே சிறந்தது. அவ்வாறு செயற்படும்போது அதன் பலாபலன்கள் சந்தேகமில்லாத நீடித்த சமாதானத்திற்கும் அச்சமின்றிய புரிந்துணர்விற்கும் ஆக்கபூர்வமான அபிவிருத்திக்கும் வழிவகுக்கும்.
எனவே, இந்தப் பயணத்தில் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த ஆர்வலர்களுடன் ஆன்மிகவாதிகள், ஆண்கள், பெண்கள், இளைஞர் யுவதிகள், அனுபவசாலிகள் அனுபவமற்றோர் என்று எல்லோரும் இணைந்து கொள்ள வேண்டும்.
அவ்வாறானதொரு கூட்டு அணியாலேயே சமாதானச் செயற்பாடுகளை வெல்ல முடியும்.
தனியே அனுபவஸ்தர்கள் ஒரு புறமும் அனுபவமில்லாதர்கள் இன்னொரு திசையிலும் பயணிப்பதால் பல்லின சமுதாயங்கள் வாழும் ஒரு நாட்டிலும் பிரதேசத்திலும் நீடித்த நிலையான சமாதானத்தை ஒரு போதும் அடைய முடியாது.
அனுபவஸ்தர்களையும் அனுபவம் இல்லாதவர்களையும் கொண்டு இயங்கும் ஒரு கற்றுக் கொள்ளும் அணியாலேயே எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைக்க முடியும்.
இளையோரை முதியோரும் முதியோரை இளையோரும் பரஸ்பரம் புரிந்து கொள்ள முடியாத ஒரு பரம்பரை இடைவெளி இப்பொழுது ஏற்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி செய்து பரஸ்பரம் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு பயணப்பாதையைத் தெரிந்தெடுக்க வேண்டும்.
சமூக ஒருங்கிணைப்பில் எல்லோருடைய பிரதிநிதித்துவமும் இருப்பதுதான் வெற்றிக்கு வழிவகுக்கும்.
தன்னிச்சையாக இயங்காமல் எல்லோருமாக பரஸ்பர கலந்துரையாடலை மேற்கொண்டு என்பது பிரச்சினைகளை ஆய்வு செய்து அதற்கு பதிலிறுக்கும் வகையில் இயங்க வேண்டும்” என்றார்.
இந்நிகழ்வில் இன நல்லிணக்க செயற்பாடகளிலும் பயிற்சிப் பட்டறைகளிலும் பங்கபற்றியவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
நாடுபூராகவும் தற்போது இடம்பெற்றுவரும் “இலங்கையில் அனைத்து சமயங்கள், மற்றும் அனைத்து இனங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல்” திட்டத்தை பிரிட்டிஷ் உயர் ஸ்தானீகராலயம், ஆசிய மன்றம் மற்றும் தேசிய சமாதானப் பேரவை ஆகிய நிறுவனங்கள் அமுலாக்கம் செய்கின்றன.
0 Comments:
Post a Comment