குடியிருப்பு நோக்கத்திற்கு நீண்டகால குத்தகையில் வழங்கப்படும் அரச காணிகளுக்கு மிக குறைந்த விலை மதிப்பீட்டினை செய்யக் கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். ஜனாதிபதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, மேற்படி விடயம் தொடர்பாக அரச காணிகளை குடியிருப்பு நோக்கத்திற்கு நீண்டகால குத்தகையில் வழங்கும் நோக்குடன், அரசு நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளும் விம்சவிய திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவும் உள்வாங்கப்பட்டு நடைமுறை படுத்தப்படுகின்றது.
இத்திட்டமானது அரச காணியில் 1979 ஆம் ஆண்டிற்கு பின்னர் குடியிருக்கின்ற பொதுமக்களிற்கே மேற்கொள்ளப்படுகின்றது. இத்திட்டத்தில் ஒவ்வொரு குடும்பமும் பெறுகின்ற வருமானத்திற்கு ஏற்றவாறு வகைப்படுத்தி குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பத்திற்கு குறைந்த கட்டணமும், ஏனையவர்களிற்கு அவர்களின் வருமானத்திற்கேற்றவாறு கட்டணங்களும் அறவிடப்பட வேண்டும்.
இவ் நடவடிக்கைக்கு விலை மதிப்பீட்டு திணைக்களம் காணிகளை மதிப்பீடு செய்யும் போது அக்காணியில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகளை விடுத்து வெற்றுக் காணிகளுக்குரிய பெறுமதியை மாத்திரம் மதிப்பிட வேண்டும்.
ஆனால் தற்போது மேற்கொள்ளப்படுகின்ற மதிப்பீடுகளில் அதிகளவான தொகை பணத்தினை பொதுமக்கள் செலுத்த வேண்டிள்ளது. உதாரணமாக இருதயபுரம் மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் கணிக்கப்பட்ட பெறுமதியில் 1 வீத கட்டணம் செலுத்த வேண்டிய நபருக்கு ரூபா 400,000 மொத்த பணமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இது மாத்திரம் அல்லாது இன்னும் பலருக்கு இவ்வாறே அதிக கட்டணம் மதிப்பிடப்பட்டுள்ளது. இக்கட்டணங்கள் தனியாரிடம் காணிகளை கொள்வனவு செய்யும் விலையை விட அதிகமாகும், மண்முனை வடக்கு பகுதி மாநகர சபைக்குட்பட்ட பகுதியாக இருந்தும் 90 சதவீதமான பகுதி மிகவும் பின்தங்கிய கிராமங்களாகவே காணப்படுகின்றது. இந்த பின்தங்கிய கிராமங்களில் உள்ள அரச காணிகளில் குடியிருக்கின்ற மக்களிடமே இந்த கட்டணங்களை செலுத்துமாறு பணிக்கப்பட்டுள்ளது
எனவே, இந்த விலை மதிப்பீட்டு திணைக்கள உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடு தொடர்பில் மீள் பரிசீலணை செய்து இக்கட்டணங்களை குறைக்க நடவடிக்கை மேற்கொள்வதுடன், தற்போது மேற்கொள்ளப்படுகின்ற விலை மதிப்பீட்டினை மிக குறைந்த மதிப்பீடாக கணிக்க நடவடிக்கை மேற்கொண்டு எமது மக்களிற்கு தங்களால் முடிந்த உதவியினை வழங்குமாறு தங்களை தயவாக கேட்டுக் கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கடிதத்தின் பிரதிகள் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், மட்டக்களப்பு மாவட்ட விலை மதிப்பீட்டாளர், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
(tx :adda)
0 Comments:
Post a Comment