வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கான நேர்முகத் தேர்வை தற்போது அரசாங்கம் நடாத்தி வருகின்றது, இந்த வாய்ப்பை கிழக்கு மாகாணப் பட்டதாரிகள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் புதன்கிழமை 18.04.2018 கிழக்கு மாகாணப் பட்டதாரிகளுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்தார்.
அந்த வேண்டுகோளில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் வெளியான அறிவித்தலுக்கு அமைய, விண்ணப்பித்த வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகத் தேர்வு தற்சமயம் கடந்த 16ஆம் திகதியிலிருந்து மாவட்ட செயலகங்களில் நடைபெற்று வருகின்றது.
எனவே, இதுவரை தங்களை பதிவு செய்து கொள்ளாத பட்டதாரிகள் தமது மாவட்ட செயலகங்களுக்குச் சென்று தங்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு அரசு கேட்டுள்ளது.
அதன்படி ஏற்கெனவே பட்டியலில் இடம்பெறாத அரச தொழில்வாய்ப்பையே நம்பியிருக்கும் வேலையற்ற பட்டதாரிகள் தங்களைப் பதிவு செய்து கொண்டு நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றி அரச தொழில்வாய்ப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாக கிழக்கு மாகாணப் பட்டதாரிகள் இந்த விடயத்தில் கவனமெடுக்க வேண்டும்.
கிழக்கு மாகாண சபை எனது தலைமையிலான நிருவாகத்தின் கீழ் கடந்த இரண்டரை வருட காலம் இருந்தபோது கிழக்கு மாகாணத்திலுள்ள மனித வளமான வேலையற்ற பட்டதாரிகளைப் பயன்படுத்துமாறும் அவர்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குமாறும் நான் தொடர்ச்சியாக வலியுறுத்தி அரசை வந்துள்ளேன்.
கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்ட பின்னரும் கூட நான் கிழக்கு மாகாண ஆளுநரிடம் தொடர்ச்சியாக இந்தக் கோரிக்கையை முன் வைத்து வந்துள்ளேன்.
கிழக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் 150 நாட்களுக்கும் மேலாக போராட்டங்களை முன்னெடுத்து போட்டிப் பரீட்சைகளும் நிறைவடைந்துள்ள நிலையில் பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்களை துரிதமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தேன்.
பட்டதாரிகள் தொழில் கேட்டு வீதியோரங்களில் போராட்டங்களை முன்னெடுக்கும் நிலைமையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்.
கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பாக நாம் திரட்டிய ஆவணங்கள், மற்றுமுள்ள விவரங்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ மற்றும் திட்டமிடல் அமைச்சுக்கு அனுப்பி அவர்களுக்கான நியமன அனுமதியைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்,
நாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிஙஹ ஆகியோருக்கு அவர்களுடன் பங்கேற்ற அரச நிகழ்வுகளில் பகிரங்கமாகவும் தனிப்பட்ட ரீதியிலும் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கும் செயன்முறையை துரிதப்படுத்துமாறு நாம் பல தடவைகள் வலியுறுத்தினோம்,
எமது தொடர்ச்சியான முயற்சியின் பலனாக எமக்கு முதற்கட்டமாக 1700 பட்டதாரிகளை நியமிப்பதற்கான அனுமதி கிடைத்து, அதனடிப்படையில் எமது மாகாண சபையின் பதவிக்காலம் நிறைவடைவதற்குள் அவர்களுக்கான நியமனங்களை வழங்குமாறு நாம் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தோம்.
0 Comments:
Post a Comment