29 Apr 2018

மட்டக்களப்பு சிவராம் நிகழ்வில் சண் தவராஜாவின் கட்டுரைத் தொகுப்பு நூல் அறிமுகம்.

SHARE
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியாலாளர் தராகி சிவராமின் 13 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வில் ஊடகவியலாளர் சண் தவராஜாவின் தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகர்களின் பங்கு என்ற கட்டுரைத் தொகுப்பு நூல் மட்டக்களப்பில் அறிமுகம் செய்து வெளியீட்டு வைக்கப்பட்டது.
2005 ஆம் ஆண்டு கொழும்பில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளரும் இராணுவ ஆய்வாளருமான தர்மரெட்ணம் சிவராமின் 13 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு மட்டக்களப்பு மத்திய வீதியிலுள்ள மறைக்கல்வி நடு நிலைய மண்டபத்தில் சனிக்கிழமை (28) மாலை 3.30 மணியளவில் நடைபெற்றது. இந் நிகழ்வின் ஒரு பகுதியாக சுவிஸ் நாட்டில் வசித்துவரும் மட்டக்களப்பைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் சண் தவராஜாவின் நூல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. 

ஊடகவியலாளர் சண் தவராஜாவின் தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் ஊடகர்களின் பங்கு என்ற கட்டுரைத் தொகுப்பு நூல் கடந்த 22 ஆம் திகதி சுவிஸ் நாட்டில் நூலாசிரியர் சண் தவராஜாவினால் வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தது. இந்த நூல் சிவராம் ஞாபகார்த்தமாக இலங்கை வாசகர்களுக்காக மட்டக்களப்பில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. 

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்  யாழ் ஊடக அமையம் மற்றும் ஊடக அமைப்புக்களின் இணைவுடன் நடைபெற்ற இந்த வருட ஞாபகார்த்த நிகழ்வுகள் இலங்கை அரசியலில் மக்கள் மயப்பட வேண்டிய ஊடக மனோநிலை என்ற தொனிப் பொருளில் நடைபெற்றது.

சிவராம் நிகழ்வையொட்டியதாக ஊடகம் - மக்கள் - அரசியல் என்ற தலைப்பில் சனிக்கிழமை முற்பகல் கல்லடியிலுள்ள ஊடகக் கற்கைகளுக்கான நிறுவனமான வொயிஸ் ஒப் மீடியாவில் ஊடகத்துறையில் தற்போது பணியாற்றுபவர்கள், புதிதாகப் பிரவேசிக்கவுள்ள புதியவர்களுக்குமான ஊடகப்பயிற்சிப்பட்டறையொன்றும் இடம்பெற்றது.

இம் முறை நடைபெற்ற தராகி சிவராமின் நினைவு நிகழ்வில், இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் அ.நிக்சன் உட்பட சிங்கள தமிழ் சிரேஸ்ட ஊடகவியலாளர்களும், சிவராமின் நெருங்கிய நண்பர்களும் உரையாற்றினர்.

இந் நிகழ்வில், வடக்கு, கிழக்கு, தெற்கு, கொழும்பு, மலையகம் உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள், சிவராமுடன் இணைந்து பணியாற்றியவர்கள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தராகி எனச் செல்லமாக அழைக்கப்பட்ட தர்மரெட்ணம் சிவராம் கொழும்பில் வைத்து கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் திகதி வெள்ளை வானில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்கருகில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இருப்பினும் இது வரையில் இவருடைய படுகொலை தொடர்பான விசாரணைகள் நிறைவடையவோ குற்றவாளிகள் தண்டிக்கப்படவோயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





















SHARE

Author: verified_user

0 Comments: