1 Apr 2018

இலங்கை அரசியல் உலக அரசியல் நலன்களுக்காகவும் நாம் எமது அமைப்பை பயன்படுத்த தயாரில்லை – அருண்காந்

SHARE

இலங்கை அரசியல் உலக அரசியல் நலன்களுக்காகவும் நாம் எமது அமைப்பை பயன்படுத்த தயாரில்லை. எம்மால் முடியும். எமது நாட்டில் வசிக்கும்  நல்ல மனம் படைத்த நல்லுள்ளங்களின் உதவியுடன் பலமான மக்கள் நலனோம்பும் கட்டமைப்பை உருவாக்கி வருகின்றோம். 
என இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.அருண்காந்த் தெரிவித்தார்.


நாடு முழுவதும் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட வசதிகுறைந்த  மாணவர்களுக்கு கடந்த நான்கு வருடங்களாக இந்து சம்மேளனத்தின் சேவைப்பிரிவாகிய “ஹிண்ட்போஸ் எய்ட” அமைப்பானது புலமைப்பரிசில் நிதியாதாரங்களைச் செய்து வருகின்றது. வருடாவருடம் கிழக்கு மலையகம் தெற்கு சப்ரகமுவ ஊவா ஆகிய மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கே இவ்வாறு அந்தந்த மாவட்டங்களில் வைத்து  நிதியாதாரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு கிழக்கு மாகாணத்தில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கும், மலையக பிரதேசங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கும், வெள்ளிக்கிழமை (30) புலமைப்பரிசில் நிதியாதாரங்கள் காசோலை வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.அருண்காந்த். இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

நாம் பல்வேறு வகையில் பின் தள்ளப்பட்டுள்ளோம். குறிப்பாக கல்வியிலும் பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கியுள்ளோம். எம்மையும் எம் அடையாளங்களையம் யார் அழித்தாலும் மீண்டும் மீண்டெழ எமக்கு கல்வியே அடிநாதமாய் விளங்கி வருகின்றது. இதனை நன்கு விளங்கிக் கொண்ட எம்முன்னோர்கள் சிறு வயதில் இருந்தே கல்வியையும் பண்பாட்டையும்  கற்றுக்கொடுத்து வந்தனர். 

இந்து சம்மேளனத்தின் கோரிக்கைகளை ஏற்று இம்மாணவர்களுக்கு உதவ முன்வந்த  கொடைவள்ளல் விஜயபாலன் ஜீ அவர்களுக்கும் கொழும்பு நடராஜா அவர்களுக்கும் எமது இதயங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். உண்மையில் எமது மாணவர்களுக்கு உதவ பல்வேறு உலக அமைப்புக்கள் எமது அமைப்பை அணுகி வருகின்றனர். நாமும் அவர்களோடு இன்முகத்தோடு கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகின்றோம். எனினும் அவ்நிறுவனங்கள் முன்வைக்கும் நிபந்தனைகளை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. 

நிதி ஆதாரம் தருகின்றோம். எனவே நீங்கள் அவருக்கெதிராகவும் இவருக்கெதிராகவும் (யாரைச்சொன்னார்கள் என்பதை கூற முடியாது )தமிழ் மக்கள் வெறுக்கும் வன்னம் பிரச்சாரம் செய்ய வேண்டும். தமிழ் மக்களை எந்த நேரமும் கொதி நிலையில் வைத்திருக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளை முன்வைக்கின்றனர். எமக்கு  எமது மக்களின் துயர் துடைப்பே முக்கியமானது.

இலங்கை அரசியல் உலக அரசியல் நலன்களுக்காகவும் நாம் எமது அமைப்பை பயன்படுத்த தயாரில்லை. எம்மால் முடியும். எமது நாட்டில் வசிக்கும்  நல்ல மனம் படைத்த நல்லுள்ளங்களின் உதவியுடன் பலமான மக்கள் நலனோம்பும் கட்டமைப்பை உருவாக்கி வருகின்றோம். இதன்மூலம்  வறிய மாணவர்களை முன்னகர்த்தி எமது சமுதாயத்திற்கு மேலும் வலுச்சேர்ப்போம் என்றார். 

SHARE

Author: verified_user

0 Comments: