படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர் டி.சிவராமின் 13 வது ஆண்டு நினைவினை முன்னிட்டு அவரது படுகொலை தொடர்பான விசாரணையினை வலியுறுத்தியும் வடகிழக்கில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரியும் மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டமும் கையெழுத்து போராட்டமும் சனிக்கிழமை (28) மட்டக்களப்பு காந்திபூங்கா முன்றலில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், யாழ் ஊடக அமையம், மற்றும் வடக்கு கிழக்கு ஊடகவியலாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், சிவில் அiமைப்புக்களின் பிரதிநிதிகள், சிவராமின் உறவினர்கள், என பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர் டி.சிவராமின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தபட்டது. பின்னர் ஊடகவியலாளர்கள் மட்டக்களப்பு நகரில் பதாகைகளை ஏந்தியவாறு படுகொலை சொய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டி பேரணியாக வந்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊடகத்துறை வரலாற்றில் தனக்கென தனியிடத்தினைக்கொண்டு தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தினை தென் பகுதியில் மட்டுமன்றி சர்வதேசத்திற்கும் கொண்டுசென்ற ஊடக ஜாம்பவனாக திகழ்ந்த நிலையில் பேரினவாதிகளினால் நயவஞ்சகமாக சிரேஸ்ட ஊடகவியலாளர் மாமனிதர் டி.சிவராம் படுகொலைசெய்யப்பட்டார்.
மாமனிதர் டி.சிவராம் படுகொலையின் சூத்திரதாரிகள் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என தொடர்ச்சியான போராட்டங்களையும் கோரிக்கைகளையும் விடுத்துவரும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அவரது நினைவு தினத்தன்றும் அந்தகோரிக்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் கையெழுத்து போராட்டமும், கவன ஈர்ப்பு போராட்டமும் நடைபெற்றது.
குறிப்பாக படுகொலைசெய்யப்பட்ட சிங்கள ஊடகவியலாளர்கள் தொடர்பில் தொடர்ச்சியான நீதிவிசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ஆனால் 35 இற்கும் மேற்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ள நிலையில் ஒரு ஊடகவியலாளரின் கொலை தொடர்பிலும் இதுவரையில் நீதியைப்பெற்றுக் கொடுக்கவில்லை.
இந்த நல்லாட்சியாவது படுகொலைசெய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நீதியைபெற்றுக்கொடுக்கும் என்று கருதிய போதிலும் கடந்த காலப்போக்கையே இன்றும் காணமுடிகின்றது.
இந்த நிலையில் மாமனிதர் சிவராம் மற்றும் ஐ.நடேசன் உட்பட படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பிலான விசாரணைகளுக்காக தனி ஆணையம் அமைத்து அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பிவைக்கும் வகையில் கையெழுத்து போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
0 Comments:
Post a Comment