ஏறாவூர் பொலிஸ் பிரிவு மிச்நகர், தாமரைக்கேணி கிராமத்தில் வசித்து வந்த 13 வயதுடைய பாடசாலை மாணவனைக் காணவில்லை என அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ள முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாமரைக்கேணி அலிஸாஹிர் மௌலானா வித்தியாலயத்தில் தரம் 6இல் கற்கும் முஹம்மது அனீஸ் முஹம்மது இர்ஷாத் (வயது 13) என்ற மாணவனே கடந்த வியாழக்கிழமை 01.03.2018 அன்று மாலையிலிருந்து காணாமல் போயிருப்பதாக முறையிடப்பட்டுள்ளது.
சம்பவ தினத்தன்று மாலை 4 மணிக்குப் பின்னர் சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டுச் சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அதேவேளை, தனது மகன் கொண்டு சென்ற சைக்கிள் ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பு பஸ் தரிப்பிடத்திற்குச் சமீபமாகவுள்ள வீடொன்றில் இருப்பது தெரியவந்தது. அங்கு சைக்கிளை வைத்து விட்டு தான் காத்தான்குடிக்குச் செல்வதாகவும் பின்னர் வந்து சைக்கிளை எடுத்துக் கொள்வதாகவும் அந்த வீட்டாரிடம் கூறிவிட்டு சென்றதாக அறியக் கிடைத்தது என காணாமல் போன சிறுவனின் தாய் பாத்திமா ஸபிய்யா தெரிவித்தார்.
மேற்படி சிறுவன் பாடசாலைக் கல்வியுடன் மார்க்கக் கல்வி அல்குர்ஆன் ஓதல் வகுப்புக்கும் சென்றுகொண்டிருந்த நிலையிலேயே காணாமல் போயுள்ளார் என பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சிறுவனைப் பற்றிய ஏதாவது விவரங்கள் தெரிந்தால் 0652240487 எனும் ஏறாவூர் பொலிஸாரின் தொலைபேசிக்கோ அல்லது 0754392285 எனும் தமது தொலைபேசி இலக்கத்துக்கோ தயவுடன் அறியத் தருமாறு காணாமல் போன சிறுவனின் தந்தை முஹம்மது அனீஸ் பொதுமக்களைக் கேட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment