ஏறாவூர்ப் பொலிஸ் பிரிவில் உள்ள தளவாய் பிரதேசத்தில் திங்கட்கிழமை இரவு 12.03.2018 அங்குள்ள பத்தினி அம்மன் கோயில் ஒன்றின் உண்டியலை திருடிக் கொண்டு சென்ற நபரை சற்று நேரத்தில் துரத்திச் சென்று கைது செய்திருப்பதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை மாவட்டம் வெருகல் பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதான குடும்பஸ்தரே இச்சம்பவத்தின்போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டதும்;, ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் சிரேஷ;ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் அவர்களின் நெறிப்படுத்தலில், குற்றத் தடுப்புப் பொலிஸ் பொறுப்பதிகாரி நிரோஷன் பெர்னான்டோவின் வழிகாட்டலில் ஏறாவூர் பொலிஸ் குற்றத் தடுப்பு புலனாய்வு அதிகாரி சார்ஜன்ற் ஈசாலெப்பை பதூர்தீன் தலைமையிலான பொலிஸ் அணியினர் விசாரணைகளைத் துரிதப்படுத்தி சந்தேக நபரை சற்று நேரத்தில் கைது செய்தனர்.
இதுபற்றி தளவாய் பத்தினி அம்மன் ஆலயத்தின் பூசகரான கந்தசாமி விஜயகுமார் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கும் போது திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் கோயிலுக்குள் தன்னை மூடி மறைத்த ஆடையை அணிந்திருந்த நபர் கோயில் உண்டியலை திருடிக் கொண்டு வெளியே வருவதைக் கண்டு டோர்ச் லைற்றை எரிய வைத்தபோது அந்நபர் ஆக்ரோஷமாக என்னைக் கடந்து சென்றார்.
உடனே 119 எனும் அவசர பொலிஸ் தொலைபேசி உதவிச் சேவைக்கு அழைத்து விவரத்தை தெரியப்படுத்தியதும் சில நிமிடங்களுக்குள் தளவாய்க் கிராமத்திற்கு விரைந்த பொலிஸார் உண்டியலோடு தப்பியோடிக் கொண்டிருந்த நபரைக் கைது செய்துள்ளனர்.
இந்நபர் திருகோணமலை வெருகல் பிரதேசத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தர் என்றும் இவர் சமீப சில நாட்களாக மட்டக்களப்பு ஏறாவூர் தளவாய்ப் பிரதேசத்திற்கு வந்து தான் வேறொரு திருமணம் செய்யப் போவதாகக் கூறி ஒரு பெண்ணை ஏமாற்றித் திருமணம் செய்துள்ளார் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட பத்தினியம்மன் உண்டியலில் இருந்து ஆயிரத்து இருநூறு ரூபாய் பெறுமதியான நாணயக் குற்றிகளும் தாள்களும் மீட்கப்பட்டன.
0 Comments:
Post a Comment