ஆலய உண்டியல்களில் சேரும் காணிக்கைப் பணத்தை உண்டியல்களிலேயே நீண்ட காலத்திற்கு விட்டு வைக்காது பாதுகாப்புக் கருதி அப்பணத்தை உடனுக்குடன் வங்கிகளில் வைப்பிலிடுமாறு தான் பாதுகாப்பு ஆலோசனை வழங்குவதாக ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் சிரேஷ;ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஆலயங்களின் நிருவாகத்தினருக்கு அவர் புதன்கிழமை 14.03.2018 விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தெரிவித்ததாவது, கோயில்களில் இருக்கும் உண்டியல்களைக் குறிவைத்து சில கொள்ளையர்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். அவ்வப்போது இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
இது குறித்து பொலிஸாரோடு சேர்ந்து பொது மக்களும், ஆலய நிருவாகத்தினரும் அவதானஞ் செலுத்த வேண்டும்.
இந்த வாரத்தின் துவக்கத்தில் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு தினங்களும் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள இரு வேறு இடங்களில் இரு வேறு ஆலய உண்டியல்கள் பணத்தோடு திருடப்பட்டுள்ளன.
எனினும், பொலிஸாரின் துரித புலனாய்வு நடவடிக்கைகளால் திருட்டுப் போன உண்டியல்களும், அவற்றிலிருந்த பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதோடு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, இந்த விடயத்தில் பொதுமக்களும் கோயில் நிருவாகங்களும் விழிப்பாக இருக்க வேண்டிய தேவைப்பாடு உள்ளது.
ஆலய உண்டியல் பணத்தை மாத்திரமல்ல தம்மிடம் தேவைக்குப் போக மீதமுள்ள பணத்தையும், நகைகளையும் பாதுகாப்பற்ற முறையில் வீடுகளிலோ, வர்த்தக நிலையங்களிலோ வைத்திருப்பதை விட அவற்றைத் தாங்கள் விரும்பும் வங்கிகளில் பாதுகாப்பாக சேமித்து வைப்பதே அறிவுடைமையாகும்.
கொம்மாதுறையிலுள்ள காளி கோயில், மற்றும் தளவாயிலுள்ள பத்தினி அம்மன் ஆலயம் ஆகியவற்றின் உண்டியல் திருட்டில் ஈடுபட்டு கையும் களவுமாகப் பிடிபட்ட சந்தேக நபர்கள் இருவரும் வெளிப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
ஒருவர் திருகோணமலை மாவட்டத்தையும், மற்றையவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் தொலைதூரப் பிரதேசத்தையும் சேர்ந்தவர்.
எனவே, வெளியாரின் நடமாட்டம் குறித்தும் அவர்கள் என்ன நோக்கத்திற்காக இங்கு வந்து தங்கியிருக்கின்றார்கள் என்பது குறித்தும் பொதுமக்கள் விழிப்பாக இருந்து அவர்களது நடத்தைகளில் ஏதேனும் சந்தேகம் ஏற்படும்போது அதுபற்றி உடனேயே பொலிஸாருக்குத் தகவல் தரவேண்டும்.
பொது மக்கள் பொலிஸார் உறவு வலுப்பட்டால் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவது சுலபமாக இருக்கும்.” என்றார்.
0 Comments:
Post a Comment