மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி மத்தியஸ்த சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான பயிற்சிச் செயலமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்தியஸ்த சபையின் மட்டக்களப்பு அம்பாறை பிராந்தியத்துக்கான பயிற்சி அலுவலரும் சமூக சேவையாளருமான எம்.ஐ.முஹம்மத் ஆஸாத் தெரிவித்தார்.
காணி மத்தியஸ்த சபை இயங்குவது தொடர்பாக தெரிவு செய்யப்பட்ட காணி மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கான பயிற்சிச் செயலமர்வு வியாழக்கிழமை 01.03.2018 மட்டக்களப்பு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.
ஆரம்ப நிகழ்வு தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது, மாவட்டத்திற்கு ஒரு மத்தியஸ்த சபை என்ற அடிப்படையில் இந்த காணி மத்தியஸ்த சபை அங்கு வாழும் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியதாக அமைந்துள்ளது.
பிரதேசத்தில் காணப்படும் காணி சம்பந்தமான பிணக்குகளுக்கு சம்பந்தப்பட்ட சாராருக்கிடையில் சமரசத்தைக் கொண்டு வருவதே காணி மத்தியஸ்த சபையின் பிரதான நோக்கமாகும்.
மாவட்டத்தின் மூலை முடுக்கெல்லாம் இந்தக் காணி மத்தியஸ்த சபை இடம்பெயர் சேவைகளை நடாத்தி காணிப் பிரச்சினைகளில் சமரசத்தை ஏற்படுத்தும்.
தேவையுள்ள பகுதிகளில் தேவைக்கேற்ப அதிக சேவைகளைச் செய்வதற்கும் முன்னுரிமை அளிக்கும்.
அதேவேளை, 2 மில்லியன் ரூபாவுக்கு உட்பட்ட காணிப் பிணக்குகளுக்கு மத்தியஸ்தம் வகிப்பதற்கே காணி மத்தியஸ்த சபைக்கு அதிகார வரம்பு உள்ளது.
அதற்கு மேற்பட்ட காணிப் பிணக்குகள் வழமை போன்று நீதிமன்ற நடைமுறைகளையே அணுக வேண்டியிருக்கும்.
இவ்விதம் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 22 காணி மத்தியஸ்த சபை உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு, அதனோடு இணைந்ததாக துறைசார்ந்தவர்களாக காணி உத்தியோகத்தர், சட்டத்தரணி, நில அளவையாளர் ஆகியோரும் இந்த காணி மத்தியஸ்த சபையுடன் சேர்ந்து இயங்குவர்.
இதற்கும் மேலதிகமாக, ஈடுபாடுடைய தரப்பாக அரசாங்க அலுவலர்களுக்கும் செயலமர்வுகளை நடாத்த ஏற்ற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.
காணி சம்பந்தமான அலுவல்களைக் கவனிக்கும் அனைத்து அரசாங்க அலுவலர்களும் இந்தக் கருத்தங்கிற்கு உள்வாங்கப்படுவார்கள்.
பிரதேச மட்டத்திலுள்ள காணி உத்தியோகத்தர், வெளிக்கள போதனாசிரியர், காணிப் பயன்பாட்டு உத்தியோகத்தர் ஆகியோருக்கும் காணி மத்தியஸ்தம் சம்பந்தமாக செயலமர்வுகள் நடாத்தப்படவுள்ளன. இது விடயமாக மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அமைச்சு அதிகாரிகள் பங்குபற்றும் காணி விடயமான இடம்பெயர் சேவையை நடாத்துவதற்குத் தோதாக ஏப்ரல் மாதம் மற்றுமொரு செயலமர்வு துறைசார்ந்த வல்லுனர்களைக் கொண்டு நடாத்தப்படும்” என்றும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment