16 Mar 2018

கல்லெறிவோரைக் களையெடுக்குமாறு வேண்டுகோள்

SHARE
அறிவற்ற விதத்தில் புகையிரதப் பயணிகளுக்கு அச்சத்தையும் பீதியையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தும் வகையில் ஏறாவூரில் கல்லெறிவோரை கண்டு பிடித்து குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துமாறு புகையிரத நிலைய அதிகாரிகள் ஏறாவூர் பொலிஸாரையும் பொது அமைப்புக்களையும் பொதுமக்களையும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக ஏறாவூர் புகையிரதப் பாதையை ஒட்டியுள்ள பள்ளிவாசல்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரச்சாரங்களை மேற்கொள்ளுமாறும் அந்த அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

சமீப சில நாட்களாக கொழும்பு - மட்டக்களப்பு, மட்டக்களப்பு – கொழும்புக்கிடையிலான நகர் சேர் சாதாரண மற்றும் கடுகதிப் புகையிரதங்கள் ஏறாவூரைக் கடக்கும்போது சில கும்பல்கள் ஆங்காங்கே நின்று புகையிரதக் கண்ணாடிகளை நோக்கி கல் மண் என்பனவற்றை வீசுவருவது பற்றி பொலிஸாருக்கும் புகையிரதத் திணைக்களத்தற்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக புகையிரத நிலைய அதிகாரிகளும், ரயில்வே பணியாளர்களும் கருத்துத் தெரிவிக்கும்போது,

புகையிரதப் பயணம் என்பது அநேகமானோருக்கு மன மகிழ்ச்சியையும் சௌகரியத்தையும் தரக் கூடியது என்பதால் பெரும்பாலானோர் புகையிரதப் பயணத்தைத் தெரிவு செய்கிறார்கள்.

குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், கர்ப்பிணித் தாய்மார், வயோதிபர்கள், நோயாளிகள் இப்படிப்பட்டோர் மிகுந்த பாதுகாப்பு சௌகரிய நம்பிக்கையுடன் புகையிரதப் பயணத்தை மேற்கெசாள்ளும் போது சில விஷமிகள் தமது அறிவீனத்தால் புகையிரத கண்ணாடிகளை நோக்கி கல், மண் என்பனவற்றை வீசி அச்சத்தையும், பீதியையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்துகின்றனர்.

புகையிரத ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து கண்கள் உட்பட பயணிகளின் ஏனைய அவயவங்களைக் காயப்படுத்தக் கூடும், சிலவேளை இத்தகைய காயங்கள் நிரந்தர அங்கவீனமாகவும் மாறிவிடக் கூடும்.

நாடு தற்போது எதிர்நோக்கியிருக்கும் சிக்கலான கொந்தளிப்பான நிலைமையில் இத்தகைய விசமத்தனமான செயற்பாடுகள் இருக்கும் நிலைமைகளை இன்னும் இன்னும் சிக்கலாக்கி விடக் கூடும்.

ஆகவே, இதுபற்றி ஒட்டு மொத்த சமூகமும் அக்கறை எடுக்க வேண்டும். இத்தகைய நாசகாரச் செயல்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும். இந்த விடயத்தில் ஏறாவூர் பொலிஸாரும் ஏறாவூரிலுள்ள சமூக நல அமைப்புக்களும் பள்ளிவாசல் மற்றும் பொது நிறுவனங்களும் கவனம் எடுக்க வேண்டும்” என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  


SHARE

Author: verified_user

0 Comments: