23 Mar 2018

சில்லித்தாரா முட்டை எடுக்கச் சென்றவர் குளத்தில் மூழ்கி மரணம்.

SHARE
வாகரை – மதுரங்குளத்தில் இருந்து குடும்பஸ்தரான ஆணொருவரின் சடலம் புதன்கிழமை  21.03.2018 மீட்கப்பட்டுள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த கே.கனகலிங்கம் (வயது 31) எனும் குடும்பஸ்தரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, மதுரங்குளத்தில் வாழும் சில்லித்தாரா எனும் தாரா இனத்தைச் சேர்ந்த நீர்வாழ் பறவைகள் குறிப்பிட்ட காலத்தில் முட்டைகளை இட்டு அடைகாப்பது வழக்கம்.

தற்போது அப்பறவைகள் முட்டையிடும் காலம் என்பதால் சில்லித்தாரா முட்டைகளை உணவுக்காக எடுத்து வரும் நோக்கில் குறித்த நபர் அங்கு சென்று முட்டைகளைச் சேகரிப்பதில் ஈடுபட்டிருந்துள்ளார்.

அவ்வேளையில் சேறும் சகதியும் நிறைந்த மதுரங்குளத்தில் மூழ்கியுள்ளார்.
குளத்திற்குச் சென்றவர் மீண்டும் வந்து சேராதது குறித்து உறவினர்கள் வாகரைப் பொலிஸாருக்கு அறிவித்தவுடன் தேடுதல் மேற்கொள்ளப்பட்டபொழுது சடலம் குளத்திலிருந்து மீட்கப்பட்டது.

சடலம் சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூறாய்விற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் இச்சம்பவம்பற்றி மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
 

SHARE

Author: verified_user

0 Comments: