மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சி மன்றங்களை அமைப்பதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு எமது நிபந்தனையற்ற ஆதரவினை நாங்கள் வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம்.
என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உபதலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு தமிழர் விதலைக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு விகிதாசாரப் பட்டியலிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள த.ஜெயசந்திரனின் சந்தியப்பிரமாண நிகழ்வு மாங்காடு கிராமத்தில் செவ்வாய்க் கிழமை (20) மாலை நடைபெற்றது இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடரந்து உரையாற்றுகையில்…….
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலூடாக பலதரப்பட்ட முரண்பாடுகள் தோற்றுவித்துள்ளன. இந்த தேர்தல் முறையானது பலவருடங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்டபோது பலதரப்பட்ட முரண்பாடுகளை தோற்றுவித்ததனூடாக கைவிடப்பட்எருநடதது. தற்போது அது மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் கட்சிக்கு வாக்களித்தவர் இருக்கின்றார்கள், சாதிக்கு வாக்களித்தவர்கள் இருக்கின்றார்கள், மண்ணின் மைந்தனுக்கு வாக்களித்தவர்கள் இருக்கின்றார்கள், பிரதேசத்திற்கு வாக்களித்தவர்கள் இருக்கின்றார்கள், கட்சிக்கு வாக்களித்தவர்கள் இருக்கின்றார்கள், இவ்வாறு பலதரப்பட்ட முறைகளிலே இந்த தேர்தலில் வாக்களிக்கப்பட்டள்ளன.
இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அண்ணளவாக 70 ஆயிரம் வாக்குகளையும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 46 ஆயிரம் வாக்குகளையும், தமிழர் விடுதலைக் கூட்டணி 26 ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளன. இருந்தும் ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைக்க கூடிய சூழல் மட்டக்களப்பு மாட்டத்தில் உள்ள உள்ளுராட்சி சபைகளில் இல்லை. எனவே ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டிய தேவையே கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
ஏனைய கட்சிகளையும் மற்றவர்களையும் மதிக்கக் கூடியவாறு சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளன மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தளவில் மக்கள் தேசிய கட்சிகளுக்கும் ஏனைய கட்சிகளுக்கும் ஒரு ஆணையை வழங்கியிருக்கின்றனர். அதாவது கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் சார்ந்த கட்சிகள் அனைத்தும் ஒருபோதும் பிரிந்துவிடக் கூடாது நீங்கள் அனைவரும் ஓரணியில் திகழ வேண்டும் இல்லாதவிடத்து நாங்கள் எதிர்வரும் தேர்தல்களில் தேசியக் கட்சிகளை நாங்கள் ஆதரிக்க நேரிடும் என்ற செய்தியினை தமிழ் மக்கள் வாக்களிப்பின் ஊடாக வழங்கியிருக்கின்றனர்.
ஆகவே இந்தேர்தல் ஊடாக உறுதியான செய்தியை தமிழ்க் கட்சிகளுக்கு மக்கள் வழங்கியிருக்கின்றார்கள். நீங்கள் ஒன்று சேரவேண்டும் தனித்து போட்டியிடக் கூடாது என்ற செய்தி இதன்மூலம் மேலோங்கியிருக்கின்றது. எமது கட்சியினைப் பொறுத்தளவில் 2017 ஆம் ஆண்டு எங்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் உள்ள ஒருசிலரின் முரண்பாடு காரணமாக நாங்கள் தனியாக செல்வதற்கு நிற்பந்திக்கப்பட்டோம். எமது கட்சியைப் பொறுத்தமட்டில் விரும்பியோ விரும்பாமலோ பிரிந்து செல்வதற்குரிய எந்த செயற்பாடும் எமது கட்சியிடம் இருக்கவில்லை. நாங்கள் அதனை விரும்பியதுமில்லை அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள போவதுமில்லை எனவே இந்த தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டிய நிற்பந்தத்ததை உருவாக்கியவர்கள் ஒரு சில அரசியல்வாதிகளே! என்பதனை மக்களாகிய நீங்கள் மறந்து விடக்கூடாது எதிர்காலத்தில் இந்த நிலைமை தொடரக் கூடாது என்ற செய்தியினை மக்கள் வழங்கியுள்ளார்கள்.
இந்த செய்தியினை ஏற்றுக் கொண்டவர்களாக இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற உள்ளுராட்சி சபைகளுக்கு எமது கட்சியின் ஆலோசனைக்கு அமைவாக தமிழ்ர்களின் ஒற்றுமையை வலுச்சேர்க்கும் முகமாகவும், எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் கட்சிகள் ஒன்று சேர்வதன்னூடாக தமிழன் ஒருவனை முதலமைச்சராக கொண்டுவர வேண்டும் என்பதன் அடிப்படையில் முதற்கட்டடமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எந்தவித நிபந்தனையும் அற்றவகையில் ஆதரவினை வழங்குவதற்கு எமது கட்சி எமது உறுப்பினர்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது இந்த தீர்மானத்தின்படி நாங்கள் எதிர்கட்சியில் இருந்து ஆதரவளிப்பதா? ஆளுங்கட்சியில் இருந்து ஆதரவளிப்பதா? ஏன்பதனை தமிழ்த் தேசியக் கூட்மைப்புத்தான் தீர்மானிக்க வேண்டும்.
எம்மைப் பொறுத்தவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் மாத்திரமே மாகாண சபைத்தேர்தலில் முதலமைச்சரைக் கைப்பற்றக் கூடிய சூழலை நாங்கள் உருவாக்கலாம். திருகோணமலை, அம்பாரை, மட்டக்களப்பு மாவட்டங்களைப் பொறுத்தவரையில் இந்த ஒற்றுமை இருக்கவேண்டும். இந்த கிழக்கு மாகாணத்திலே 40 வீதமாக இருந்த எமது இனத்தின் வீதத்திற்கு சமனாக ஏனைய இனங்கள்; உருவாகக்கூடிய சூழல் இருக்கின்றது. இந்த தருணத்தில் நாங்கள் பிரிந்து நிற்க முடியாது. மற்றும் வடக்கு மாகாணத்தை பொறுத்தமட்டில் வேறுசூழலும் கிழக்கு மாகாணத்தினை பொறுத்தமட்டில் வேறுசூழலும் காணப்படுவதனை தமிழ்த் தலைமைகள் புரிந்துகொள்ள வேண்டும.; இதனை புரிந்து கொள்ளாமல் ஒட்டுமொத்த வடக்கு கிழக்கிற்கு ஒரே முடிவினை எடுப்பார்களேயானால் கிழக்கு மாகாண மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற செய்தியினை நாங்கள் கூறிவைக்க விரும்புகின்றோம்.
கட்சிகளுக்குள் காணப்படும் போட்டா போட்டிகள், கோபதாபங்கள், பொறாமைகள், என்பனவற்றைக்கைவிட்டு விட்டுக்கொடுப்புக்களை மேற்கொண்டு கிழக்கு மாகாண தமிழ் மக்களின் நன்மைகருதி தமிழ்த் தலைமைகள் ஒட்டுமொத்த முடிவினை எடுக்க வேண்டும். இல்லாதாவிடத்து கிழக்கு மாகாண தமிழ்கள் பலவீனமடைந்து விடுவார்கள் இந்த நிலைக்கு எமது கட்சி ஒருபோதும் இடமளிக்காது ஒற்றுமைக்காக பாடுபடுதல் என்ற செய்தியினையும் இத்தால் கூறிவைக்கின்றேன். எனவே அமைய இருக்கின்ற உள்ளுராட்சி சபைகளுக்கு எமது ஆதரவை வழங்குவதற்கான செய்தியினை நாங்கள் தெரிவித்திருக்கின்றோம். இதனை உறுதிப்படுத்துவது தொடர்பாக எதிர்வரும் தினங்களில் இதனை உறுதிப்படுத்துவதற்கு சம்பந்தபட்ட கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment