வாகரை பிரதேச செயலாளர் பிரிவிவுக்குட்ட வாகரையின் பிரதான வீதியை அண்டியுள்ள கிராமங்களுக்குள் சுமார் அரை நூற்றாண்டுக்குப் பின்னர் பிரவேசித்த காட்டு யானைகளால் அழிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆழமான கடல் முகத்துவாரத்தை நீந்திக் கடந்து வந்து இந்த யானைகள் ஊருக்குள் புகுந்ததாகவும் கிராம மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து தான் உட்பட தென்னை மரங்கள் சேதமாக்கப்பட்ட மூன்று பேர் வாகரை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக விவசாய அமைப்பின் செயலாளர் ரீ.ஜீ குருகுலசிங்கம் தெரிவித்தார்.
வாகரையின் ஒதுக்குப்புற காட்டுப் பிரதேசங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் அவ்வப்போது இருந்தபோதும்கூட காட்டு யானைகள் ஆழமான வாவியை நீந்திக் கடந்து பிரதான வீதியோடு அண்டியுள்ள ஊர்ப் பகுதிக்குள் பிரவேசித்தது கடந்த 50 வருட காலத்தில் இதுவே முதற் தடவை என்று 73 வயதான குருகுலசிங்கம் மேலும் தெரிவித்தார்.
சனிக்கிழமை (24) இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 25.02.2018 ஆகிய இருநாட்களும் இவ்விதம் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்ததாக கிராம மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
சனிக்கிழமை மாங்கேணி கிராமத்திற்குள் ஊடுருவிய காட்டு யானைகளை அங்குள்ள கிராமத்தவர்கள் ஒன்று சேர்ந்து கடற்கரையோரமாக விரட்டியடித்துள்ளனர்.
அவ்விதம் துரத்தியடிக்கப்பட்ட யானைகள் கடற்கரையோர காடுககளுக்கூடாக நேரே நடந்து வாகரை வெல்லையடிமடு ஊருக்குள் புகுந்து அங்கிருந்த தென்னை மரங்களை அழித்து துவம்சம் செய்துள்ளன.
இவ்விதம் வீட்டுத் தோட்டங்களில் வளர்ந்து காய்க்கும் நிலையில் இருந்த சுமார் 100 இற்கு மேற்பட்ட தென்னை மரங்கள் அதன் குருத்துக்கள் பிடுங்கப்பட்ட நிலையில் காட்டு யானைகளால் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன.
கிராம மக்களின் அச்சத்தைப் போக்கவும் தோட்டங்களையும் விவசாயத்தையும் பாதுகாப்பதற்கும் காட்டுக்குள் யானைகளை விரட்டியதப்பதற்கும் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளின் உதவி நாடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment