7 Feb 2018

அமெரிக்காவில் ஆடம்பர வீட்டைக் கொண்டிருக்கும் அலிஸாஹிர் மௌலானா ஏறாவூரில் தனக்கு குடியிருக்க குடிசை இல்லை என புலம்பித் திரிவது மக்களை ஏமாற்றுவதற்கே முன்னாள் முதல்வர் செய்னுலாப்தன் நஸீர் அஹமட்

SHARE
தற்போது நிதி மோசடிக் குற்றச் சாட்டில் சிக்கியுள்ள அலிஸாஹிர் மௌலானா அமெரிக்காவில் ஆடம்பர வீட்டைக் கொண்டுள்ளார் ஆனால் ஏறாவூரில் தனக்கு குடியிருக்க ஒரு குடிசை தானும் இல்லையென மக்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்துகிறார் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
ஏறாவூர் நகரில் புதன்கிழமை 07.02.2018 இடம்பெற்ற ஏறாவூர் நகரசபையைக் கைப்பற்றும் வியூகத்தில்  ஐக்கிய தேசியக் கட்சி சார்பாகப் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அவர் உரையாற்றினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ஏறாவூர் நகர சபையின் தவிசாளராக இருந்து பின்னர் மாகாண சபை உறுப்பினராகி அதன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த 30 வருட காலத்தை ஓட்டிய அலிஸாஹிர் மௌலானா, குடியிருக்க ஒரு வீடில்லாத ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இலங்கையில் ஒருவர் இருப்பாராயின் அத்தகைய ஒருவர் தானே என்றும் ஆடம்பரமில்லாமல் மக்களுக்காக தன்னைத் தியாகஞ் செய்தவரும் தானே என்றும் அப்பட்டமாகப் பொய் சொல்லித் திரிகின்றார்.

இது மக்களின் அனுதாபத்தை பெறுவதற்கான ஒரு ஏமாற்றுப் பிழைப்பேயன்றி வேறொன்றுமில்லை. இது அவமானகரமான கௌரவப் பிச்சை கேட்கும் வழிமுறையாகும்
இந்த அலிஸாஹிர் மௌலானாவுக்கு அமெரிக்காவில் பல கோடி ரூபாய் பெறுமதியான ஒரு ஆடம்பர மாளிகை உண்டு.

கொழும்பிலும் அதேபோன்றதொரு மாளிகை உண்டு.
மட்டக்களப்பில் உள்ள சர்வதேச பாடசாலைகள் உட்பட இன்னும் பல வருவாய் தரும் நிறுவனங்களால் மாதாந்தம் 15 இலட்ச ரூபாய்க்கு மேற்பட்ட வருமானம் தனக்குக் கிடைப்பதாக அவரே அரசியல் கூட்டங்களில் பேசியுள்ளார்.

அதேவேளை அவருக்கென்றும் மனைவிக்கென்றும், பிள்ளைகளுக்கென்றும் தனித்தனியே அதி ஆடம்பர சொகுசு வாகனங்கள் உள்ளன.

இதேவேளை, அமெரிக்காவில் வாழும்  மட்டக்களப்பைச் சேர்ந்த பெண்மணியிடம் 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் வட்டிக்கு கடனாகப் பெற்றுக் கொண்ட 150,000 (ஒரு இலட்சத்து ஐம்பதுனாயிரம்) அமெரிக்க டொலர்களில் சுமார் 75,981 அமெரிக்க டொலர்களை அவர் திருப்பிச் செலுத்தவில்லை எனவும் அமெரிக்கவாழ் பிரஜையான குறித்த பெண்மணி நிதி மோசடிக் குற்றச்சாட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

தனக்கு வழங்க வேண்டிய மிகுதிப் பணம், வழக்குச் செலவு மற்றும் பணத்திற்கான 10 சதவீத வட்டி என்பவற்றையும் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா திருப்பிச் செலுத்த வேண்டும் என முறைப்பாட்டாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு இஸ்லாமியன் அதுவும் கண்ணியமிக்க நபிகள் நாயகத்தின் வம்சாவழியில் வந்ததாகக் கூறப்படும் ஒரு பரம்பரையைச் சேர்ந்தவர் சர்வதேச நிதி வழங்கும் நிபுணர்களுக்கூடாக கையெழுத்திட்டு வட்டிக்குக் கடன் பெற்றிருப்பது எவ்வகையில் இஸ்லாமிய வாழ்க்கை முறைக்குப் பொருந்தும்?

ஆகவே, கோடானு கோடி சொத்துக்களையும், மாதாந்தம் மில்லியன் ரூபாய்களுக்கு மேல் வருமானத்தையும் ஆடம்பர வாழ்க்கையையும் கொண்டிருப்பவர் தான் எளிமையான வாழ்க்கை வாழ்வதாகக் கூறுவது எவ்விதம் பொருந்தும்?

தங்களது ஜீவனோபாயத்திற்காக உள்ளுரில் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் வெறும் சில ஆயிரங்கள் மாதாந்தச் சம்பளத்திற்காக பணியாற்றும் ஏழை யுவதிகளைப் பற்றி தரக் குறைவாகப் பேசி வருகிறார்.

இது அவரது சுய ரூபத்தைக் காட்டி நிற்கின்றது.
எனது முதலமைச்சுப் பதவிக் காலத்தில் ஏறாவூரிலுள்ள ஏழை மக்களின் அபிவிருத்திக்காக என்னால் கொண்டு வரப்பட்ட எத்தனையோ திட்டங்களைச் செய்ய விடாமல் தனது அரசியல் சாயம் வெளுத்துப் போகும் என்பதால்  அவர் முட்டுக் கட்டையாக இருந்துள்ளார்.

இவ்வாறான அரசியல் வங்குரோத்துக் காரர்களை இனிமேலும் தெரிவு செய்யாமல் அவமானப்பட்டு கூனிக் குறுகி நிற்கும்படி மக்கள் மண் கௌவச் செய்ய வேண்டும்.
ஏறாவூரின் அபிவிருத்திக்காக ஏற்கெனவே தொடக்கி வைக்கப்பட்டுள்ளதும் எதிர்காலத்திற்காக முன்மொழியப்பட்டுள்ளதுமான  பல்லாயிரம் கோடி ரூபாய் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களை முடித்து வைக்காமல் நான் ஓயமாட்டேன்”என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: