ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பிரதான வீதியில் வைத்து லொறியொன்றில் மறைத்துக் கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி மரப்பலகைகளை தாம் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் பொடிலிஸ் நிலைய குற்றத் தடுப்புப் பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி பி.பி.எஸ். நிரோஷன் பெர்னாண்டோ தலைமையிலான பொலிஸ் குழுவினர் வியாழக்கிழமை பிற்பகல் 01.02.2018 இந்த மரப்பலகைகளைக் கைப்பற்றினர்.
பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலை அடுத்து இடம்பெற்ற இந்த சோதனை நடவடிக்கையில் சுமார் 200 வேம்பு மரப் பலகைகளும் சுமார் 75 மாமரப் பலகைகளும் கைப்பற்றப்பட்டன. இவை சுமார் 10 அடி நீளமும் 1 அடி அகலமும் உடையதாக இருந்துள்ளன.
மாமரப் பலகைகளுக்கு அனுமதிப் பத்திரம் தேவையற்றது என்பதனால் இந்த வேம்பு மரப் பலகைகள் மாமரப் பலகைகளுக்குக் கீழாக அடுக்கப்பட்டு அனுமதிப் பத்திரமின்றிக் கொண்டு வரப்பட்டிருந்தன.
பலகைகளையும் அவற்றை ஏற்றிவரப் பயன்படுத்தப்பட்ட லொறியையும் கைப்பற்றிய பொலிஸார் சாரதியுடன் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகத் தெரிவித்தனர்.
இச்சமபவம் பற்றி மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.
பாதுகாக்கப்பட்ட அரச வனப் பகுதிகளிலிருந்து இந்த மரங்கள் வெட்டப்பட்டு பலகைகளாக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment