மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கும் கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தினால் நடாத்தும் தொழில் பயிற்சியினை நிறைவு செய்த யுவதிகளின் உற்பத்திப் பொருட் கண்காட்சியும் விற்பனையும், வவுணதீவு மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் புதன்கிழமை 21.02.2018 நடைபெற்றது.
கடந்த ஆண்டில் தையல், ஐசிங்கேக், கைப்பணிப் பொருட்கள் மற்றும் ஆடை அலங்காரம் போன்றவை தொடர்பான ஒரு வருட டிப்ளோமா பயிற்சி நெறியினை நிறைவு செய்த யுவதிகளே இக் கண்காட்சியிலும் விற்பனை நிகழ்விலும் ஈடுபட்டனர்.
கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். அரசகுமார் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ். சுதாகர், திட்டமிடல் பணிப்பாளர் ரி. நிர்மலராஜ், சிரேஸ்ட தையல் போதனாசிரியை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்ட பிரதேச செயலாளர் எஸ். சுதாகர் பேசுகையில், இவ்வாறான டிப்ளோமா பயிற்சிகளை நிறைவு செய்தோர் தொழில்வாய்ப்புக்களைப் பெறும்போது பயிற்சியினை நிறைவு செய்தமைக்கான சான்றிதழ்களும் உள்ளதால் அது அத் தருணத்தில் பேருதவியாக அமையும்.
அதேபோன்று பயிற்சியினை பெற்றவர்கள் தையல் தொழிற்சாலைகளுக்கு வேலைக்காக செல்லும்போது கூடிய சம்பளத்தை பெறக்கூடிய சந்தர்ப்பங்களும் உள்ளது.
பெரும்பாலான பெண்கள் சாதாரணதரம் உயர்தரம் கற்றபின் வீட்டிலே வேலையின்றி இருக்கும் நிலை இங்கு காணப்படுகின்றது. இந் நிலையை மாற்றவேண்டும்.
இப் பிரதேசத்திலிருந்து நகர் பிரதேசங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் குறைந்த வருமானத்திற்காக பெண்கள் செல்கின்றனர்.
ஆனால் வேலைக்கேற்ற வருமானம் கிடைக்காமல் மிகக் குறைந்த ஊதியத்தையே பெறுகின்றனர்.
இதனால் இத்தகைய பயிற்சிகளை சிறந்த முறையில் நிறைவு செய்தபின் அதை வைத்துக்கொண்டு சாதாரணமாக வீட்டில் இருந்துகொண்டே உயர் வருமானத்தை பெறமுடியும்” எனத் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment