கற்பானை, மதுரங்கண்டடிச்சேனை, நெடியமடு களிக்குளம் கிராமங்களைச் சேர்ந்த சுமார் 210 இற்கு மேற்பட்ட குடும்பங்கள் இந்த உயிரச்ச அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன.
காட்டு யானைகள் குட்டிகளோடு வருவதால் தாய் யானைகள் மிகவும் மூர்க்கத்துடன் காணப்படுவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பிரதேசத்தில் சமீப ஒரு சில நாட்களாக காட்டு யானைகளின் ஊடுருவலால் ஏற்பட்டுள்ள உயிராபத்துக் குறித்து கிராம மக்கள் கருத்து தெரிவித்தனர்.
உன்னிச்சை தொடக்கம் கற்பானை வரையான நீண்ட வனப் பிரதேசங்களில் இருந்து மக்கள் வாழும் விவசாய குடிநிலப் பகுதிகளுக்குள் காட்டு யானைகள் நுழைவதைத் தடுப்பதற்காக காட்டோரங்களில் மின்சார அதிர்ச்சித் தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது.
ஆயினும், நெடியமடு பகுதியில் பாதுகாப்பான சாவடி ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த இந்த மின்சார அதிர்ச்சித் தடுப்பு வேலிகளுக்கு மின்சாரத்தை வழங்கும் செயலூக்கியை(நுநெசபணைநச) சமூக விரோத சக்திகள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் திருடிச் சென்று விட்டனர்.
அதன் பின்னர் காட்டு யானைகள் மின்சார அதிர்ச்சி வேலிகளை ஏறி மிதித்துக் கொண்டு கிராமங்களுக்குள் நுழைய ஆரம்பித்து விட்டன.
இதுவரை திருடப்பட்டதற்குப் பதிலாக புதிதாக தடுப்பு வேலிகளுக்கு மின்சாரத்தை வழங்கும் செயலூக்கியை (நுநெசபணைநச) மீண்டும் அதிகாரிகள் பொருத்தவில்லை என்றும் கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது பெரும்போக நெற்செய்கை மற்றும் சேனைப் பயிர்ச் செய்கைக் காலம் என்பதாலும் மாரிமழை காலம் என்பதாலும் காட்டு யானைகளில் இருந்து பாதுகாப்புப் பெறுவது தமது வாழ்வாதார மற்றும் உயிர்ப் போராட்டம் என்றும் கிராம மக்களும் விவசாயிகளும் மேலும் தெரிவிக்கின்றனர்.
காட்டு யானைகள் கூட்டங் கூட்டமாக கிராமங்களுக்குள் உள் நுழையத் துவங்கியதும் பெண்களும் குழந்தைகளும் உயிரச்சித்தில் உறைந்து போய் குடிசைகளுக்குள் பதுங்கியிருக்க ஆண்கள் இரவு முழுவதும் காட்டு யானைகள் வருமிடங்களில் காவல் இருப்பதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
குழந்தைகள், பாடசாலைச் சிறார்கள், வயோதிபர்கள் மற்றும் நோயாளிகள் காட்டு யானைகளின் தாக்குதல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வழியின்றி மரண பயத்துடன் காலங்கழிப்பதாகக் கூறுகின்றனர்.
0 Comments:
Post a Comment