24 Jan 2018

முச்சக்கர வண்டிச் சாரதிகள் சங்கத்தைக் கூட்டியதற்கு பொலிஸ் விசாரணை அரசியல் காழ்ப்புணர்ச்சி என்கிறார் அதன் தலைவர் முஹம்மத் வஹாப்

SHARE
ஏறாவூர் முச்சக்கர வண்டிச் சாரதிகள் சங்கத்தினரைக் கூட்டி சங்க உறுப்பினர்களின் சேமநலன்கள், சங்கத்திற்கான நன்மை பயக்கும் விடயங்கள் சம்பந்தமாக கலந்தாலோசித்தமைக்காக தான் பொலிஸ் விசாரணைக்கு முகம்கொடுத்ததாக ஏறாவூர் முச்சக்கர வண்டிச் சாரதிகள் சங்கத்தின் தலைவர் முஹம்மத் வஹாப் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரமுகராகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் கிழக்கு மாகாண முன்னாள்  பிரதித் தவிசாளரும் சுகாதார அமைச்சருமான எம்.எஸ். சுபைரின் இணைப்பாளராகவும் இதுவரை இருந்து செயலாற்றி வந்தேன்.

ஆயினும் உள்ளுராட்சித் தேர்தல் சம்பந்தமாக கட்சிகள் சுயேச்சைக் குழுக்கள் சிறந்த திட்டங்களை விஞ்ஞாபனங்களை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்த்திரந்த போதும் முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்டின் ஆலோசனைகளோடு ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெளியிட்ட ஏறாவூர் பெரு நகர அபிவிருத்திக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தில் மக்களுக்கான பல அனுகூலங்கள் இருந்தன.

அந்த அனுகூலங்கள் ஏறாவூர் முச்சக்கர வண்டிச் சாரதிகளுக்கும் நன்மை பயப்பதாகக் காணப்பட்டதால் அது சம்பந்தமாகக் கலந்துரையாடுவதற்கு முச்சக்கர வண்டிச் சாரதிகள் சங்கத்தைக் கூட்டி கலந்தாலோசித்தோம்.
இதனைப் பொறுத்துக் கொள்ளாத அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டோரால் தவறாக வழி நடாத்தப்பட்ட ஒரு சிலர் பொலிஸாருக்கு பிட்டிசன் அடித்துள்ளார்கள்.
அதனால் நான் பொலிஸ் விசாரணைக்கு முகம்கொடுக்க வேண்டியேற்பட்டது.” என்றார்.

பிரதேச மக்களின் நன்மைக்கான திட்டங்களை முன்வைத்துள்ள ஏறாவூர் நகர சபைக்காக ஐ.தே.க சார்பில் போட்டியிடும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரின்  வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக தான், இந்தத் தேர்தலில் மட்டுமல்லாது எதிர்வரும் காலங்களிலும் ஏறாவூர்ப் பிரதேச அபிவிருத்தியை நோக்கிய முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமதின் திட்டங்களுடன் இணைந்து அபிவிருத்திக்காகப் பாடுபடவுள்ளதாகவும்   அவர் தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: