ஆட்சி அதிகாரத்திலுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு வாக்களிப்பதன் ஊடாகவே தமது பிரதேசங்களில் உள்ள தேவைகளை நிவர்த்தி செய்து அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
காத்தான்குடி நகர சபைத் தேர்தலில் பதுறியா வட்டாரத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிடுகின்ற அலி சப்ரிக்கு ஆதரவாக நேற்று வியாழக்கிழமை இரவு நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது….
1977ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொகுதிவாரி தேர்தல் முறை குறித்து மக்கள் மத்தியில் போதியளவு தெளிவில்லை. இந்த வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு மாத்திரமே இப்பகுதி மக்கள் வாக்களிக்க முடியும். அவரே இத்தொகுதியின் அபிவிருத்திக்கு பொறுப்பாகவும் இருப்பார். இப்பகுதியில் நாங்கள் பரந்தளவில் சேவை செய்துள்ளோம். இருப்பினும் மேலும் பல தேவைகள் உள்ளன அவற்றுக்கான தீர்வுகளும் அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன.
உள்ளுராட்சித் தேர்தலானது அரசாங்கத்தை மாற்றுகின்ற தேர்தலோ, ஆட்சியை கவிழ்க்கின்ற தேர்தலோ அல்ல. அத்துடன், ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவையோ அல்லது என்னையோ வீழ்த்துகின்ற தோர்தலும் அல்ல. மாறாக உங்கள் பிரதேசங்களின் அபிவிருத்தி மற்றும் அடிப்படை பொருளாதாரத்தை கட்டியெழுப்புகின்ற சபையின் தேர்தலாகும். இந்த சபையின் உறுப்பினராக வருபவர் மக்களின் தேவைகளை நிறைவேற்றுகின்றவராக சிறப்பான முறையில் இயங்க வேண்டுமானால் அதற்கான நிதியை அரசாங்கமே வழங்க வேண்டும்.
எனவே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்சியின் கீழ் போட்டியிடுகின்றவர்களுக்கு ஆதரவு வழங்குவதன் ஊடாகவே தமது பிரச்சினைகளுக்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும். அதிகாரத்திலுள்ளவர்களுக்கு அப்பால் வேறு ஒருவருக்கு வாக்களிப்பதன் மூலம் தமது தேவைகளுக்கு தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியாது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமது கட்சியின் தலைவர், நாடாளுமன்றம் மற்றும் அமைச்சு அதிகாரங்களும் எமது கட்சிக்கு உள்ளன. கலைக்கப்பட்டுள்ள மாகாண சபைக்கான ஆளுநரையும் நாமே நியமித்துள்ளோம். இவ்வாறு ஜனாதிபதி அதிகாரம், நாடாளுமன்றத்தின் அதிகாரம், மாகாண சபையின் அதிகாரம் என அனைத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் இருக்கும் நிலையில் நகர சபையின் அதிகாரத்தையும் அதன் கீழ் கொண்டு வரும் பட்சத்திலேயே எமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்றார்.
0 Comments:
Post a Comment