24 Jan 2018

பட்டிருப்புத் தொகுதியில்; நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் இழப்பதற்குக் காரணமாக இருந்தவர்தான் கணேசமூர்த்தி.

SHARE
பட்டிருப்புத் தொகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் இழப்பதற்குக் காரணமாக இருந்தவர்தான் இந்த கணேசமூர்த்தி என்பவர்  இதனை எமது மக்கள் நன்கு புரிந்து செயற்பட வேண்டும். இவ்வாறு அவர் இனிமேலும் சதிவேலைகளை மேற் கொள்வதற்காகத்தான் அவர் மீண்டும்  எமது பகுதிக்கு இறக்கப்பட்டுள்ளார். 
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்றுப் பிரதேச சபைக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் தவராசா தயாழினியின் வீட்டில் செவ்வாய்க் கிழமை (23) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போ அவர் மேலும் தெரிவிக்கையில்….

சில தமிழ் தலைவர்கள், மக்களைக் கருத்தில் கொள்ளாமல் அவர்களது சுகபோகங்களை மாத்திரம் கருத்தில் கொண்டு மகிந்த ராஜபக்சவுடன் சேர்ந்துதான் கடந்த காலங்களில் பிரதேச சபைகளின் ஆட்சி அதிகாரங்களைச் செய்தார்கள். இந்நிலையில் அன்று இருந்த நிலமைதான் தற்போதும் இங்கு காணப்படுகின்றது என்ற நப்பாசையில் தற்பொழுதும் மீண்டும் எமது பகுதியில் அவர்கள் களமிறங்கியுள்ளார்கள். ஒருவர் கட்சியின் தலைவராக இருக்கின்றார் அவர் சிறையிலிருக்கின்றார். இன்னுமொருவர் பல தமிழ் மக்களின் அழிவுக்குக் காரணமாகவிருந்தவர் தையல் இயந்திரத்தில் தைத்துக் கொண்டிருக்கின்றார்.
இவர்கள் எமது மக்களை வழி நடாத்தும் தலைவர்களாக இருந்தவர்கள் தற்போது தடுமாறித்திரிகின்றார்கள். இவர்கள் சிங்களப் பெரும்பான்மைக் கடசிகளில் பணங்களைப் பெற்றுத்தான் இங்கு அவர்கள் களமிறக்கப் பட்டுள்ளார்கள்.

இந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தல் அபிவிருத்திக்கான தேர்தல்தான் என தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தவிர ஏனையகட்சிகள் அனைத்தும் அவர்களது பிரச்சாரங்களில் தெரிவித்து வருகின்றார்கள், ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்த வரையில் சவர்வதேசத்தினாலும் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்ற தேர்தலாகும். 

தற்போது இங்கையில் 2 பெரும்பான்மைக் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஆளும் கட்சியாகவும், தமிழ் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர் கட்சியாகவும் இருந்து செயற்பட்டு வருகின்றது. இச்சந்தர்ப்பத்தில் அவர்கள் அனைவரும் சமஸ்டி முறையிலான தீர்வுக்காக இணைங்கியிருக்கின்றார்கள். இவைகளனைத்தும் இவ்வாறு சென்று கொண்டிருக்கின்ற நிலையில் இத்தேர்தல் காலத்தில் எமது மக்களை மனம் மாற்றும் செயற்பாட்டிலும் பலர் இறங்கியுள்ளார்கள்.  எமக்கு அபிவிருத்தி தேவைதான் அதனிலும் விட எமக்குரிய தீர்வைத்தான் நாம் வேண்டி நிற்கின்றோம். 

வக்கில்லாதவர்கள்கூட எமது மக்களிடம் வந்து வாக்குக் கேட்கின்றார்கள். சிலர் அவர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான் என மக்களிடம் தெரிவித்துக் கொண்டு வேறு ஒரு சின்னத்தை தெரிவித்து அதற்குப் புள்ளடியிடுமாறு மக்களிடம் கூறுகின்றார்கள்.

கல்தோன்றி, மண்தோற்றாக் காலத்திற்கு முன்தோன்றிய மூத்த குடியான தமிழ் குடி மக்களை யாரும் மடையர்கள் என நினைத்து விடக்கூடாது.

இங்குள்ள அமைப்பாளர்கள் யார்? ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் கணேசமூர்த்தி தேர்தல் காலத்தில் மாத்திரம்தான் எமது பகுதிகளுக்கு வருவார். கடந்த 2010 ஆம் ஆண்டு அவர் வந்து ஸ்ரீ லங்கா சுத்திரக் கட்சியில் தேர்தலில் போட்டியிட்டு ஹிஸ்புல்லாலை நாடாளுமன்ற உறுப்பினராக்கினார் பின்னர் சென்று விட்டார். பின்பு 2015 ஆம் ஆண்டு அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் தேர்தலில் போட்டியிட்டு அமிரலியை நாடாளுமன்ற உறுப்பினராக்கி விட்டுச் சென்றார்.

பட்டிருப்புத் தொகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் இழப்பதற்குக் காரணமாக இருந்தவர்தான் இந்த கணேசமூர்த்தி.  இதை எமது மக்கள் நன்கு புரிந்து செயற்பட வேண்டும். இவ்வாறு அவர் இனிமேலும் சதிவேலைகளை மேற்கொள்வதற்காகத்தான் அவர் மீண்டும்  எமது பகுதிக்கு இறக்கப்பட்டுள்ளார் என அவர் தெரிவித்தார்.









SHARE

Author: verified_user

0 Comments: