வடக்கு முதல்வராக தற்போது இருக்கின்ற சீ.விக்கினேஸ்வரன் ஐயாவை அரசியலுக்கு, கொண்டுவரும் போது, அதற்குகெதிராக நான் மட்டுமே எதிர்த்தேன். அப்போது நான் மட்டும் எதிர்த்தேன், இப்போது எல்லோரும் சரியென்கின்றனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில், மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்காக மகிழடித்தீவு வட்டாரத்தில் போட்டியிடும் ஹேமச்சந்திரனின் அலுவலக திறப்பு நிகழ்வும், தேர்தல் பரப்புரையும் (21) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போதே இதனை தெரிவித்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும், அங்கு உரையாற்றுகையில்,
சில கட்சிகளைச்சேர்ந்தவர்கள், தமது தேர்தல் விளம்பரங்களில், ஒவ்வொரு பிரதேசத்திற்கு ஒவ்வொருவரது முகத்தினைக் காட்டுகின்றனர். இவ்வாறு ஒவ்வொரு இடத்திற்கு வெவ்வேறான முகங்களை காட்டிக்கொண்டு மாற்றுத்தலைமை வேண்டுமென கூறிக்கொண்டிருக்கின்றனர். தமிழ்தேசிய கூட்டமைப்பை தோர்க்கடிக்க வேண்டும், தமிழ் அரசு கட்சியை தோர்க்கடிக்க வேண்டும், சம்பந்தனை தோர்க்கடிக்க வேண்டும். மாற்றுத்தலைமையை உருவாக்க வேண்டுமென்று கூறுகின்றனரே தவிர, மாற்றுத்தலைவர் யார் என்பதனை கூறவில்லை. அவர்கள் தலைவர் என்று கூறுகின்ற வடக்கு முதலமைச்சருக்கு, அவர் எந்த கட்சியென்றே தெரியாது. தான் எங்கு நின்று கதைக்கின்றார் என்றே தெரியாது. யாழ்ப்பாணத்தில் நின்று பேசுகின்றாரா? கொழும்பில் நின்று பேசுகின்றாரா? என்றே தெரியாது. நாங்கள்தான் அவருக்கு அரசியலை காட்டினோம். அவருக்கு அரசியல் காட்டுகின்ற போது, நான்மட்டுமே எதிர்த்தேன். ஏனையவர்கள் ஆதரித்தார்கள். ஆனால் இன்று அவர்கள் கூறுகின்றனர், நீங்கள் கூறியதே சரியானதென்று.
2013ம் ஆண்டு விக்கினேஸ்வரன் ஐயாவை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்லுகின்றபோது, நல்லூர் கோயிலை தவிர அவருக்கு வேறொன்றும் தெரியாது, தயவு செய்து தமிழ்தேசியத்திற்கு அவரை கொண்டுவரவேண்டாம், மாவை சேனாதிராஜாவை அந்த இடத்திற்கு தெரிவு செய்யுங்கள் என்று வாதாடினேன், எவரும் கேட்கவில்லை. நான் பத்திரிகைக்கு அறிக்கையை கொடுத்துவிட்டு விலகியிருந்தேன். ஆனர்லும் கட்சியின் கொள்கைக்கு கட்டுப்பட்டு அவருக்காக வேலைசெய்தேன். ஆனால் இரண்டு தேர்தல்களில் எமக்கு துரோகம் இழைத்துவிட்டார். காட்டிக்கொடுப்பதுமட்டும் துரோகமல்ல, எங்களோடு இருந்து எங்களுக்கெதிராக வேறுதிசையில் மாறி, எங்களை தோர்க்கடிக்க செயற்படுவதும் துரோகம்தான், 2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் செய்த அதே துரோகத்தினை போன்று தற்போதைய தேர்தலில் அறிக்கைவிட்டு துரோகம் செய்து கொண்டிருக்கின்றார். அவ்வாறானவரை தலைவராக ஏற்கபோகின்றோமா? சிந்திக்க வேண்டும். வடக்கு மாகாணத்தினைப் போன்று கிழக்கு மாகாணமல்ல, கிழக்கு மாகாணத்தில் காணிகள் பறிபோகின்றன, குடியேற்றங்கள் நடைபெறுகின்றன. இவற்றினை தடுக்க வேண்டிய பொறுப்பு எமக்குள்ளது.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைமையாக சம்பந்தனை ஏற்றமையினால்தான் இன்று இடைக்கால அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக அரசியல் தீர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. மகிழடித்தீவில் வேறு கட்சிகளில் வேட்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள், தகுதியானவர்கள் ஆனால் அவர்களை வழிநடத்துபவர்கள் மோசமானவர்கள். ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் இருந்த போதுதான் மகிழத்தீவு படுகொலை நடைபெற்றது. மகிழடித்தீவு படுகொலைக்கு சில கட்சியின் உறுப்பினர்களும் ஒட்டுக்குழுக்களாக செயற்பட்டனர். இவ்வாறான படுகொலையில், தம்பியை பறிகொடுத்தவர்கள், உறவுகளை பறிகொடுத்தவர்கள், பறியெடுத்த கட்சிகளிலே வாக்குகேட்டு வருகின்றனர். என்றார்.
0 Comments:
Post a Comment