யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் தாய் நாட்டிற்காக தமது உயிரைத் தியாகம் செய்த அல்லது சம்பவங்களின்போது அங்கவீனமடைந்த படையினர் மற்றும் பொலிஸாரின் குடும்பங்களுக்கு வீடுகள் நிருமாணித்துக் கொடுக்கும் “ரணவிரு சேவா” அதிகார சபையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 58 வீடுகள் நிருமாணிக்க சிபார்சு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அலுவலர் ரீ.எச். கீர்திகா ஜயவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பாக புதன்கிழமை 10.01.2018 மட்டக்களப்பில் இடம்பெற்ற ரணவிரு குடும்ப அங்கத்தவர்களுடனான சந்திப்பில் அவர் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் உரையாற்றிய அவர்,
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மரணித்த, காணாமல்போன, அல்லது சம்பவங்களின்போது அங்கவீனமடைந்த படையினர் மற்றும் பொலிஸாரில் தங்கி வாழ்ந்த 136 குடும்பங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது வரை இனங்காணப்பட்டுள்ளார்கள்.
இவர்களுக்கான சேமநலன்களை “ரணவிரு சேவா” கவனித்து வருகின்றது.
இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் “ரணவிரு சேவா” பயனாளிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 39 குடும்பங்களுக்கு ஒவ்வொன்றும் தலா 22 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவிலமைந்த வீடுகளை நிருமாணிக்கும் திட்டம் கடந்த ஜுன் மாதம் 19ஆம் திகதி ஆரம்பித்து தற்போது நிறைவடைந்துள்ளன.
இதற்கும் மேலதிகமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் முஸ்லிம் ரணவிரு சேவா குடும்பங்களின் நலனைக் கருத்திற் கொண்டு தலா 22 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவிலமைந்த மேலும் 58 வீடுகள் முன்னுரிமை அடிப்படையில் தேவை என்ற வேண்டுகோளை “ரணவிரு சேவா” அதிகார சபைக்குப் பரிந்துரைக்கப்பட்டதன் பேரில் அவற்றை நிருமாணிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
இந்த இரு வீட்மைப்புத் திட்டங்கள் மூலமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 97 வீடுகளினால் ரணவிரு குடும்பங்கள் நன்மையடையவுள்ளார்கள்.
இவற்றைத் தவிர ரணவிரு குடும்பங்களின் வாழ்வாதாரம் மற்றும் அக்குடும்பங்களிலுள்ள இளைஞர் யுவதிகளின் தொழில் வாய்ப்பையும் கருத்திற் கொண்டு பல்வேறு சுயதொழில் பயிற்சி நெறிகள் திட்டமிடப்பட்டுள்ளன” என்றார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட ரணவிரு சேவா அமைப்பின் தலைவர் எஸ்.ஏ.சி. அப்துல் வஹாப், அதன் செயலாளர் எஸ்.கனகசபை, பொருளாளர் ஏ. லிங்கராஜா உட்பட ரணவிரு பயனாளிக் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment