புதிய உள்ளுராட்சித் தேர்தல், வாக்காளர்கள் மீது எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றது என்பது பற்றிய விழிப்புணர்வு விளக்கக் கையேடு மார்ச் 12 ஜனநாயக விழிப்புணர்வு இயக்கத்தினால் தற்போது நாடு பூராகவும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
அந்தப் பிரசுரத்தில் உங்களுக்குத் தெரியுமா ? என்ற பிரிவில் “எவ்வாறாயினும், நீங்கள் விரும்பும் கட்சியின் வேட்பாளர்களில் நீங்கள் விரும்பும் வேட்பாளருக்கு விருப்பத் தெரிவை அளிப்பதற்கு அல்லது வேட்பாளர்களில் ஒருவரைத் தெரிவு செய்ய உங்களுக்கு இருந்த உரிமை இல்லாது போகின்றது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தக் கையேடுகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நீங்கள் சமூகத்திலிருந்து எதிர்பார்க்கும் மாற்றத்தை நீங்களே ஆரம்பிக்க வேண்டும்”
“புதிய உள்ளுராட்சி அதிகார சபைத் தேர்தல் முறையில் முக்கிய மாற்றங்கள்” “புதிய உள்ளுராட்சித் தேர்தல் வாக்காளர்கள் மீது எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றது” “புதிய உள்ளுராட்சி அதிகார சபையுடன் புதிய அரசியல் கலாசாரமொன்றைக் கட்டியெழுப்புவோம்” “புதிய உள்ளுராட்சி அதிகார சபைத் தேர்தல் முறையும் வாக்காளர்களும்” என்ற தலைப்புக்கள் அடங்கிய கையேடுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்ட மார்ச் 12 இயக்க விழிப்புணர்வுக் கையேடுகளில் வாக்காளர்களை விளித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “கட்சிக்காரராக அல்லாமல் நாட்டுப் பிரஜை என்ற ரீதியில் சிந்தியுங்கள், தனியாகவும் கூட்டாகவும் அணிசேருங்கள், நமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக செயற்படுங்கள்” என்றும் பிரதேச நகர மாநகர சபைக்கு கட்சி மற்றும் நிறத்தைப்’ பற்றிக் கருத்திற் கொள்ளாது பொருத்தமானவர்களை மாத்திரமே தெரிவு செய்வோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கட்சி பேதமின்றி உங்கள் பிரதேசத்திற்குத் தகுதியானவர்களை மட்டும் நியமித்துக் கொள்ள செயற்படுங்கள், பெண்களுக்கான பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளதை சாதகமாக்கிக் கொள்ள திறமையான மற்றும் ஆர்வமுள்ள பெண்களைப் பட்டியலில் உள்ளடக்குமாறு தலைமைத்துவத்தை வலியுறுத்துங்கள், கட்சி பேதமின்றி பிரதேசத்தின் நலன் கருதி செயற்படக் கூடியவருக்கு ஆதரவை வழங்குங்கள், ஊழல் பேர்வழிகளை எதிர்த்து நில்லுங்கள், தகுதியான வேட்பாளரைத் தெரிவு செய்யுமாறு கட்சியை வலியுறுத்துங்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை உருவாக்குவதற்காக பொறுப்புமிக்க பிரஜை என்ற வகையில் உங்களால் முடிந்த உயரிய பங்களிப்பைச் செய்யுங்கள்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment