12 Dec 2017

மத வியாபாரம் இலங்கைக்குப் பாதகமானது. சுதந்திரமடைந்ததிலிருந்து இலங்கையிலுள்ள எந்தச் சமூகமும் இலாபமடையவில்லை. அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி. ஜெய்சங்கர்

SHARE
மத வியாபாரம் இலங்கைக்குப் பாதகமானது. சுதந்திரமடைந்ததிலிருந்து இலங்கையிலுள்ள எந்தச் சமூகமும் இலாபமடையவில்லை என கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி. ஜெய்சங்கர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சுச் செயலக சிரேஷ்ட உதவிச் செயலாளரும் “ராஜாத்தி”என்ற புனை பெயரில் எழுதும் சிறுகதை எழுத்தாளரும் ஆய்வாளருமான வெள்ளத்தம்பி தவராஜா வினால் எழுதப்பட்ட “என் கொலைகாரர்கள்” என்னும் சிறுகதைத் தொகுதியின் வெளியீட்டு நிகழ்வு சனிக்கிழமை 098.12.2017 “படி” கலாசார வட்டத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அங்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஆர்வலர்கள் மத்தியில்  மேலும் உரையாற்றிய கலாநிதி ஜெய்சங்கர்,

அரசியல் நடாத்துவதற்காக எவ்வளவுக்குப் பிரிவினைகளைச் செய்கின்றோமோ அவ்வளவுக்கு அழிவும் காத்திருக்கிறது. ஆனாலும் நாம் தொடர்ந்தும் அழிவுகளுக்குப் பின்னும் அதையேதான் செய்து கொண்டிருக்கின்றோம்.

அரச பணிகளில் இருக்கின்றவர்கள் மக்களை அந்நியப்படுத்தாமல் மனிதாபிமானத்தோடு கடமையைச் செய்ய வேண்டும்.

எழுத்தாளர்கள், அதிகாரிகள், அமைதியை விரும்பும் ஆர்வலர்கள், கலைஞர்கள், ஆசிரியர்கள், துறைசார்ந்த விற்பன்னர்கள் ஆகியோர் பிரிவினைகளிலிருந்து மக்களை விடுவித்து கடந்த கால அமைதி வாழ்க்கைக்கு மக்களை இட்டுச் செல்ல வேண்டும்.

கிராமங்களுக்குள் இடம்பெறும் சண்டை சச்சரவுகள் அடுத்த கணப்பொழுதில் சமரசமாக முடிந்த வரலாறுகளை கடந்த காலத்தில் நாம் கொண்டிருந்தோம், ஆனால், தற்பொழுது நிலைமை தலைகீழாக உள்ளது.

மக்களுக்குள் வேண்டுமென்றே பிரச்சினைக்கான விதைகள் தூவப்பட்டு அவை மதவாதிகளாலும் இனவாதிகளாலும் அரசியல்வாதிகளாலும்  போஷிக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன.

வேறு சமூகங்களின் உற்பத்திப் பொருட்களை குரோதம் காரணமாக கொள்வனவு செய்யக் கூடாது என்று கூறி சர்வதேச உற்பத்தி நிறுவனங்களுக்கு வாய்ப்பளித்து விட்டு மெனமாக இருந்து விடுகின்றோம்.

இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து இலங்கையிலுள்ள எந்தச் சமூகமும் இலாபமடையவில்லை.

இலங்கை இப்பொழுது சர்வதேச வல்லரசு நாடுகளின் குப்பைக் கூடையாக மாறியுள்ளது.

இதனைத்தான் நாம் இனவாதத்தால் மதவாதத்தால் சாதித்திருக்கின்றோம்.

சுதந்திரமடைந்ததிலிருந்து ஆட்சியில் கோலோச்சிய அரசாங்கங்கள் ஆயிரக் கணக்கான இளைய சமுதாயத்தினரை காணாமலாக்கி கொன்றுகுவித்து அழித்தொழித்திருக்கின்றன. அங்கவீனர்களாக, அநாதைகளாக, அகதிகளாக, சொத்து சுகங்களை இழந்தவர்களாக உருவாக்கியிருக்கின்றன.

இலங்கையைப்போல சிங்கப்பூரை ஆக்குவேன் என்ற அந்நாட்டு அதிபர் அதனை உலகம் வியக்கும் உயர்தரமான நாடாக மாற்றிவிட்டார்.

ஆனால் நாம் இருந்த இலங்கையையும் இழந்து விட்டு இன்னமும் அழிவுக்கான பாதைகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துகின்றோம்.

எல்லாச் சமூகங்களும் படுதோல்வியையும் பயங்கரமான ஒரு வாழ்க்கை நிலைமையையும்தான் கட்டி வளர்த்திருக்கின்றோம்.

இத்தகையதொரு சூழ்நிலையில் எமது சிந்தனை, பேச்சு, எழுத்து, செயற்பாடு என்பவை இன, மத, சாதி, மொழி பிரதேச பேதம் கடந்து மனிதம் பேணுகின்ற ஒரு மனிதர்களாக எதையாவது செய்வதற்கு உதவ வேண்டும்.

இப்போதுள்ள மதத் தலைவர்களில் ஏராளம்பேர் ஏற்கெனவே கிராமங்களுக்குள் இயல்பாகவே இருக்கும் பல்வேறுபட்ட இனங்கள், மதங்களுக்கிடையேயான சகவாழ்வைச் சீர்குலைத்துக் கொண்டு மறுபுறத்தில் மத நல்லிணக்கம் பற்றி நயவஞ்சகமாகப் போதிக்கின்றார்கள்.

உள்ளுரில் கிராமங்களில் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைத்துக் கொண்டிருக்கும் மதத் தலைவர்கள் என்று தம்மைக் கூறிக் கொள்வோர் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் கைகளைக் கோர்த்துக் கொண்டு அரசியல் நடாத்துகின்ற ஐக்கிய மத அனுஷ்டானங்களில் ஈடுபடுகின்றனர்.

இது அருவருக்கத்தக்கதும் ஆபத்தானதும் கூட. எனவே இதுபற்றி அறம் காக்கும் மூத்தோர் இளையோருக்குப் போதித்து அதன் வழி நடந்து நல்வழி காட்ட வேண்டும்.
எமது மூதாதையரான அறிவுப் போராளிகள் தங்களைத் தியாகம் செய்து சுயநலம் மறந்து பெரிய அறிவுச் சமர் செய்தது போல நாங்களும் செய்ய வேண்டும்.

அவர்கள் காட்டிய வழிமுறைகளை நாம் முன்னெடுக்க வேண்டும். அதன் தொடராக இது தொடர்ந்தால் நல்லது.

நடைமுறையில் இதனை நாம் செய்தாக வேண்டும். அந்த நிலைமையை மீண்டும் நாம் கொண்டுவர  வேண்டும்” என்றார்.





SHARE

Author: verified_user

0 Comments: