20 Dec 2017

தகவல் உரிமைச்சட்டம் நல்லாட்சியில் மிக முக்கியமானதாகும் - மட்டு மாவட்ட அரசாங்க அதிபர்.

SHARE
தகவல் உரிமைச்சட்டம் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு வைக்கப்பட்ட பொறியாக ஒருபுறம் நாங்கள் பார்த்தாலும் நல்லாட்சி என்ற விடையத்தில் மிக முக்கியமானதாக இருக்கிறது. ஒவ்வொரு அரசாங்க உத்தியோகத்தரும் பொது மக்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களாக அல்லது வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம். என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட செயலக, பிரதேச செயலகங்களில் தகவல் உத்தியோகத்தர்களாக செயற்படுபவர்களுக்காக மட்டக்களப்பில் மூன்றுநாள் பயிற்சி நெறியின் நிறைவு நாள் திங்கட் கிழமை (18) நடைபெற்றது இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்… இது ஒரு முக்கியமானதொரு விடயம் நாம் இன்னமும் தகவல் அறியும் உரிமைக்கு முக்கியத்துவம் அளித்துச் செயற்படாத நிலை இருந்ததை நீங்கள் அறிவீர்கள். 12 ஆம் இலக்க 2016 ஆம் ஆண்டு சட்டத்தின் படி இலங்கையில் முக்கியமானதொரு சட்டமாக இது கொண்டுவரப் பட்டிருக்கிறது. உண்மையில் நல்லாட்சியில் மக்களுடைய உரிமை எனப் பாதுகாக்க வேண்டிய வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் போன்ற விடையங்கள் சம்பந்தமாக பல்வேறு நல்ல அம்சங்களை தகவல் அறியும் உரிமைச்சட்டம் கொண்டிருக்கிறது. பொது மக்கள் அவர்களுக்குத் தேவையான விடயங்களை அரச நிறுவனங்கள், பொது நிறுவனங்களிடமிருந்து அறிந்து கொள்வதற்கான ஒரு ஏற்பாடாக இருக்கிறது.

அதே வேளையில் எங்களுடைய நிருவாகத்தில் இருக்கின்ற சில நல்ல பண்புகளை மேம்படுத்துவதற்கு தகவல் அறியும் சட்டம் வகை செய்யும் என நினைக்கிறேன். எமது நாட்டில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டாலும் உலகின் ஏனைய நாடுகளில் மிகவும் சிறப்பாக இருக்கிறது. இதனுடைய பொறி அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு வைக்கப்பட்ட பொறியாக ஒருபுறம் நாங்கள் பார்த்தாலும் நல்லாட்சி என்ற விடயத்தில் மிக முக்கியமானதாக இருக்கிறது. ஒவ்வொரு அரசாங்க உத்தியோகத்தரும் பொது மக்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களாக அல்லது வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட வெண்டியவர்களாக இருக்கின்றோம்.

அந்த அடிப்படையில் மூன்றுநாள் பயிற்சி உங்களுக்கு நல்ல விடயங்கள் பலவற்றைக் கற்றுத் தந்திருக்கும் என்று நினைக்கின்றேன். இதனை உங்களுடைய அலுவலகங்களில் செயற்படுத்துவது முக்கியமானது. இச் சட்டம் ஊடான செயற்பாடு எதிர்காலத்தில் செயற்திறனாக இயங்கவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில நாடுகளில் இந்தச் சட்டத்தின் ஊடாக உத்தியோகத்தர்களுக்கெதிராக அதிகமான வழக்குகள் நடைபெற்று தீர்ப்புகளும வழங்கப்பட்ட சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. குறிப்பாக இந்தியாவில் இந்த அமைப்பு முறை மிகச் சிறப்பாக இயங்குகின்றது. எங்களுடைய நாட்டிலும் எதிர்காலத்தில் இறுக்கமான, மேலதிகமான நடைமுறையில் செயற்படுத்தப்படும் என்று நினைக்கிறேன்.

உங்களுடய அலுவலகங்களிலும் பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்கள் இதற்கான ஆவணங்களைச் சரியான முறையில் பேணிப் பாதுகாக்க வேண்டும். அத்துடன் பொதுவாக மக்களுக்குக் கொடுக்க வேண்டிய தகவல்களை இதிலே குறிப்பிடப்பட்டது போல சில தகவல்கள் 14 நாட்களுக்குள் அல்லது சில தகவல்கள் 21 நாட்களில் கொடுக்க வேண்டிவரும். எங்களுடன் தொடர்பில்லாத விடயங்களை மற்றவர்களிடம் கொடுத்து அத்தகவல்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டியடாக இருக்கிறது. அதே போல் மேல்முறையீடு தொடர்பான விடயங்கள்.

இதனை இனி எங்களுடைய அலுவலகங்களில் சிறப்பாக செயற்படுத்த வேண்டியது முக்கியமாக இருக்கும். இதிலே இன்னுமொரு விடயம் தான் ஜனாதிபதிக்குச் சொல்லுங்கள். ஜனாதிபதிக்குச் சொல்லுங்கள் என்ற செயற்திட்டத்தின் ஊடாகவும் எங்களுடைய அலுவலகங்களில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இணையத்தின் ஊடாகவே தேவையான விடயங்களை மக்கள் பெற்றுக் கொள்ளக்கூடிய முறை இதில் இருக்கிறது. தற்போது மாவட்ட செயலகத்தில், பிரதேச ரீதியாக பெற்றுக் கொள்வதற்கும் ஏற்பாடுகளைச் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வகையிய் பெயர் குறிப்பிட்ட உத்தியோகத்தர்களாகச் செயற்படுவீர்கள் அந்தவகையில் பொறுப்புவாய்ந்தவர்களாகச் செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார். 

SHARE

Author: verified_user

0 Comments: