26 Dec 2017

தேர்தல் தொடர்பான சட்டதிட்டங்களை விளங்கிக் கொள்ள பெண் வேட்பாளர்கள் வராதது வருத்தமளிக்கிறது. ஆண் வேட்பாளர்கள் கவலை

SHARE
உள்ளுராட்சி மன்றங்களுக்காக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு புதிய தேர்தல் சட்டவிதிமுறைகளைப் பற்றித் தெளிவுபடுத்தும்; விளக்கக் கூட்டம் ஏறாவூரில் இடம்பெற்றபோது அதில் மேற்படி உள்ளுராட்சி மன்றங்களுக்காகப் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் எவரும் வருகை தராதது வருத்தமளிப்பதாக கூட்டத்தில் பங்குபற்றிய ஆண் வேட்பாளர்கள் ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் அதிருப்தி தெரிவித்தனர்.
பிரச்சாரம் செய்தல், கட்சி மற்றும் சுயேச்சைக் குழுவினர் தமது காரியாலயங்களை அமைத்தல், வாகனங்களைப் பாவித்தல், ஒலிபெருக்கிகளைப் பாவித்தல், கூட்டத்திற்கான இடங்களைப் பாவித்தல், கூட்டங்களை நடாத்துதல் தொடர்பில் புதிய தேர்தல் ஒழுங்குமுறைகளின் கீழ் வேட்பாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சட்டம் ஒழுங்கு விதிகள் வேட்பாளர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டன.

ஏறாவூர் பொலிஸ் பிரிவின் தேர்தலுக்குப் பொறுப்பான பொலிஸ் பொறுப்பதிகாரி ஐ.எம். பியசேன ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும்  சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் ஆகியோரால் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் நகர சபை மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை அகிய உள்ளுராட்சி மன்றங்களுக்காக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு புதிய தேர்தல் சட்டவிதிமுறைகளைப் பற்றித் தெளிவுபடுத்தும்; கூட்டம் நடாத்தப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது.

ஏறாவூர் நகர சபை மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை ஆகியவற்றுக்காக தேர்தலில் போட்டியிடும் 9 அரசியல் கட்சிகள் இரண்டு சுயேச்சைக் குழுக்களினதும் சார்பில் சுமார் 55 ஆண் வேட்பாளர்கள் மாத்திரம் இந்த தேர்தல் சட்ட திட்டங்களைப் பற்றித் தெளிவு பெறும் கூட்டத்திற்கு சமுகமளித்திருந்தார்கள்.

எந்தவொரு கட்சியிலிருந்தோ சுயேச்சைக் குழுவிலிருந்தோ ஒரு பெண் வேட்பாளர் கூட தேர்தல் சட்ட விதிமுறைகள் தொடர்பான கூட்டத்திற்கு வருகை தரவில்லை என்பது அவதானிக்கப்பட்டதுடன் தேர்தல் சட்ட விதிமுறைகள் தொடர்பாக தெளிவுபடுத்திய பொலிஸ் அதிகாரிகளிடத்திலும் இது சுட்டிக்காட்டப்பட்டது.

SHARE

Author: verified_user

0 Comments: