கடந்த தடவை இடம்பெற்ற மாகாண சபை, மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின்போது வன்செயலில் ஈடுபட்ட சந்தேக நபர்களுக்கெதிராகத் தொடரப்பட்ட வழக்குகள் இன்னமும் முடியவில்லை என்பதனை புதிய உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனதிலிருத்திக் கொள்ள வேண்டும் என ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் தெரிவித்தார்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏறாவூர் நகர சபை மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை அகிய உள்ளுராட்சி மன்றங்களுக்காக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு புதிய தேர்தல் சட்டவிதிமுறைகளைப் பற்றித் தெளிவுபடுத்தும்; சந்திப்பு ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியில் சனிக்கிழமை மாலை 23.12.2017 இடம்பெற்றது.
அங்கு கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் வேட்பாளர்கள் மத்தியில் சட்டம் ஒழுங்கைக் கடைப்பிடிப்பதன் அவசியம் பற்றி தொடர்ந்து வலியுறுத்திய அவர்@
கடந்த தேர்தல்கள் இடம்பெற்று காலங்கடந்துள்ள போதிலும் தேர்தலின்போது வன்செயலில் ஈடுபட்டவர்களுக்கெதிராகத் தொடரப்பட்ட வழக்குகள் இன்னமும் முடியவில்லை. இத்தகைய சூழ்நிலையை தற்போது தேர்தலில் ஈடுபடும் வேட்பாளர்கள் கருத்திற் கொள்ள வேண்டும்.
இது ஒரு புதுமையான புதிய தேர்தல் சட்டங்களைக் கொண்ட தேர்தலாகும்.
இதன் அடிப்படையில் புதிய தேர்தல் சட்டங்களை அறிந்து கொண்டு சட்டம் ஒழுங்கைக் கடைப்பிடிக்குமாறு வேட்பாளர்களைத் தெளிவுபடுத்த வேண்டும் என நாம் பணிக்கப்பட்டுள்ளோம்.
இந்தத் தேர்தலோடு மட்டும் நிற்காமல் ஜனநாயக முறையில் நேர்மையாக நடந்து அடுத்தடுத்து வரும் மாகாண சபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் வேட்பாளர்களாகிய நீங்கள் முகம் கொடுக்க வேண்டும் என்றே நாம் எதிபார்க்கின்றோம்.
மாறாக, சட்டம் ஒழுங்கை மீறி, அநாவசிய குழப்பங்களை ஏற்படுத்தி, மக்களது இயல்பு வாழ்க்கையைக் குழப்பி, சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தி கைது செய்யப்பட்டு நீண்ட காலம் நீங்கள் வழக்குகளுக்கு முகம் கொடுத்து தவறாளர்களாகத் தண்டிக்கப்பட வேண்டும் என நாம் எதிர்பார்க்கவில்லை.
இது ஒரு குறுகிய வட்டாரத் தேர்தல். எனவே, அடக்கமாக அமைதியாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட முடியும்.
எதிர்த்துப் போட்டியிடும் அடுத்த வேட்பாளருக்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில் அமைதியாக நடந்து கொள்ள வேண்டும்.
தேர்தலில் தாம் சார்ந்த கட்சிக்கோ சுயேட்சைக் குழுவுக்கோ ஆதரவு கோரி பணம், பொருள், சன்மானம், உபசரணை, சலுகை, அளித்தல் ஆகாது.
கட்சிக்கோ சுயேச்சைக் குழுவுக்கோ ஆதரவைத் திரட்டும் வகையில் வாக்காளர்களுக்கு உண்ண பருகக் கொடுத்தல், உணவுப் பண்டங்கள், விநியோகித்தல், விநியோகிக்க நடவடிக்கை எடுத்தல் என்பனவும் எதிர்த்தரப்பினருக்கு அச்சத்தை ஏற்படுத்தல், தடுத்தல், வாக்களிக்க அச்சுறுத்தல் விடுத்தல், இலஞ்சம், பணமோ பொருளோ தேர்தலுக்கான ஆதரவுக்காக கடனாகக் கொடுத்தல் என்பவையும் குற்றச் செயல்களாகும்.
இவைகளைத் தவிர்த்து நீங்கள் என்ன செய்ய உத்தேசித்துள்ளீர்கள் என்பதைத் தெளிவுபடுத்தினாலேயே போதும்.
எனவே வட்டாரத்தை அபிவிருத்தி செய்வது என்ற நோக்கத்தின் அடிப்படையில் நீங்கள் தேர்தலில் குதித்தால் வன்முறைகளைத் தவிர்த்து அதனை மக்களுக்குத் தெளிவுபடுத்துங்கள்.
மக்களது இயல்பு வாழ்க்கையைச் சீர்குலைக்காத வண்ணம் நீங்கள் பிரச்சாரத்தில் ஈடுபடலாம்.
இங்கு நாம் வலியுறுத்தி சட்டத்தைத் தெளிவுபடுத்துவது உங்களை சிக்கலில் இருந்து காப்தற்குத்தான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவில் செங்கலடி, ஏறாவூர் பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதாக நேரடியாக தேர்தல் ஆணையாளருக்கு முறைப்பாடு செய்திருந்தார்கள். அதனையொட்டியே நாம் நடவடிக்கை எடுப்போம். சட்டத்தை மீறுவோரை நீதிமன்றில் நிறுத்துவோம்.” என்றார்.
0 Comments:
Post a Comment