ஆளும்தரப்பு கட்சியான ஐக்கிய தேசியக்கட்சிக்கு பட்டிருப்பு தொகுதி மக்கள் வாக்களிக்கும் போதுதான் இழந்துபோன எமக்குரிய அபிவிருத்திகளையும், மக்களின் தேவைகளையும், வேலைவாய்ப்புக்களையும் பெற்றுக்கொள்ள முடியுமென போரதீவுப்பற்று பிரதேச சபையின் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமை வேட்பாளரும், ஓய்வுபெற்ற மக்கள் வங்கி முகாமையாளருமான தம்பிராசா கணபதிப்பிள்ளை தெரிவித்தார்.
பழுகாமம் வட்டாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடும் இவர் ஞாயிற்றுக் கிழமை (24) மாலை இடம்பெற்ற மக்களை சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
பட்டிருப்பு தொகுதியைப் பொறுத்தவரையில் யுத்தத்தினால் நலிவடைந்த பிரதேசமாகும். குறிப்பாக படுவான்கரை மிகவும் அழிவுக்குட்படுத்திய பிரதேசமாக காணப்படுகின்றது. இங்குள்ள மக்களின் அடிப்படைவசதிகள், வீதிப்புனரமைப்பு, வடிகாலமைப்பு வசதிகள், இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு பங்கீடுகள், பாடசாலைகளுக்கான பௌதீக தேவைகள், உட்கட்டமைப்பு வசதிகள், போன்றவற்றை செய்யாமல் காணப்படுகின்றன.
வறுமைப்பட்ட மக்களின் வாழ்வாதாரத் தேவைகள் குறைவாகத்தான் காணப்படுகின்றன. பெரும்பாலான குடும்பங்களுக்கு சமூர்த்தி வாழ்வாதாரம் குறைவாகத்தான் பங்கீடப்பட்டுள்ளது. இவற்றை இப்பிரதேசமக்களின் தேவைகளை அறிந்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்து வறுமைப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டிய தேவை எனக்கிருக்கின்றது. போரதீவுப்பற்று பிரதேச சபைக்குரிய வாக்காளர்கள் அனைவரும் ஐக்கிய தேசியக்கட்சிக்கு வாக்களித்து, ஆட்சியை ஐக்கிய தேசியக்கட்சி கைப்பற்றுவதுதான் நியாயமாகும். மாற்றம் ஒன்றை இன்றைய இளைஞர்கள், யுவதிகள் ஒன்றிணைந்து ஏற்படுத்துவதுதான் இன்றையை தமிழர்களின் அரசியல் தேவைப்பாடாகும்.
ஒட்டுமொத்த தமிழ் மக்களை அரசியல் ரீதியாக மலினப்படுத்தப்பட்டும், வேலைவாய்ப்புக்களை வழங்காமல் தமிழ்மக்களை கவனிக்காமல் இருக்கும் அரசியல் செயற்படாகத்தான் இன்று மாவட்டத்தில் நிலவுகின்றது. பழுகாமத்திலே நூற்றுக்கு மேற்பட்ட வீதிகள் தூர்ந்துபோய் காணப்படுகின்றன. தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்ட வேலைவாய்ப்புக்களை ஆளுங்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சிக்கு வாக்களித்து தட்டிக்கேட்க வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. உள்ளுராட்சி மன்றங்களில் செயற்படுத்தப்படும் மக்கள் நலன்சார்ந்த வேலைத் திட்டங்களை மக்களின் காலடிக்கு கொண்டுவந்து சேர்க்க வேண்டிய தேவைப்பாடு எனக்கிருக்கின்றது. எனவே ஆளுங்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சிக்கு தமிழ் மக்கள் வாக்களித்து தமிழ்மக்களின் அபிவிருத்தி அபிலாஷைகளை வென்றெடுப்போம் என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment