ஒன்றுபடுங்கள் ஒன்றாகச் சேருங்கள் அதற்காக புரிந்துணர்பான விட்டுக் கொடுப்புகளுடன் செயற்படுங்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் எந்த இலட்சியத்திற்காக நாங்கள் சேர்கின்றோம் என்ற விடத்தினை மனதிலே கொண்டு புரிந்துணர்வுடன் ஒற்றுமையைப் பேணி பயணிக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சி பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 12வது நினைவேந்தல் திங்கட்கிழமை (25) மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இங்கு உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் - 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 66 ஆயிரம் வாக்குகளை மாத்திரம் பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு எங்களுக்கு வெளியே நிண்டவர்கள் எங்களுக்குள் சேர்ந்ததன் காரணமாக 2015ஆம் ஆண்டு 127 ஆயிரம் வாக்குகளை பெற்றது.
எங்களிடையே ஒற்றுமையை நாங்கள் பேணிக்கொள்ள வேண்டும் சேர்த்துக் கொண்டோம் என்பதற்காக சேர்ந்து கொள்பவர்கள் எந்த இலட்சியத்துக்காக சேர்ந்து கொண்டோம் என்று புரிந்துகொள்ள வேண்டும்.
அரசியல்வாதிகள் என்றால் குரோதத்தை வளர்த்துக்கொள்பவர்கள் மற்றவர்களோடு இணங்கிப் போகாதவர்கள் என பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அரசியலுக்குரிய அறம், சார்வீகம், தர்மம் வேண்டும் என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டியவர் அண்ணல் காந்தி அவர்கள்.
நாங்கள் விடுதலை பெற வேண்டுமானால் ஆட்பலம் மாத்திரம் போதாது எம்முடன் சேராது இருப்பவர்களையும் சேர்த்துக் கொண்டு ஆன்மீகத்தோடு சேர்ந்த செயற்பாட்டிற்கு தங்களை உகந்தவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
ஒன்றுபடுங்கள் ஒன்றாகச் சேருங்கள் அதற்காக புரிந்துணர்பான விட்டுக் கொடுப்புகளுடன் செயற்படுங்கள். புரிந்துணர்பான விட்டுக்கொடுப்பு ஒன்றுதான் ஒன்றாக பயணிப்பதற்கான ஒரு தளமாக அமைந்திடும் என்றார்
0 Comments:
Post a Comment